இனவாதம், மதவாதத்தை தூண்டினால் 2 வருட சிறை
இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையிலான கருத்து வெளியிடும் நபர்களுக்கும் அவ்வாறான செய்திகளை பிரசுரிக்கும் நபர்களுக்கும் இரண்டுவருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
இதற்கேற்ப, குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்குள் இது குறித்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகரித்ததாக குறிப்பிட்ட அவர், இன மற்றும் மதம் சார்ந்த குரோத கருத்துக்களால் இனங்களிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இதனை தடுப்பதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இன, மத, விரிசலை ஏற்படுத்த உதவும் வகையில் கருத்து வெளியிடுவது இதனூடாக தடுக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கடந்த கால ஆயுதப் போராட்டத்தை திரும்பிப் பார்த்து அந்த அனுபவத் தினூடாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதினூடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் யுகமொன்றை உருவாக்குவதற்காக நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப் பட்டது. குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துகள் வெளியிடப் படுவது இன ரீதியான வேற்றுமைகளை உருவாக்குகிறது என நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
அதனால் இன மற்றும் மதம் சார்ந்த குரோத கருத்துக்கள் இன மற்றும் மத ரீதியான பிளவை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காக சட்டம் அமுல்படுத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
எனவே, மதம், மற்றும் இன ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடுவதை தடை செய்யவும் அவ்வாறு கருத்து வெளியிடுபவர்களை தண்டிக்கவும் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்டதிருத்தத்தை வர்த்தமானியில் வெளியிடவும் அடுத்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்தார்.
இனவாதம் மற்றும் மாதவாதம் தூண்டும் நபர்கள் மட்டுமன்றி அவற்றை பிரசுரிப்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்றார்.
கண்துடைப்பு. கடந்த அரசாங்கமும் எதோ ஒரு மதப் போலிஸ் பிரிவை அமைத்து ஜில் மால் காட்டியது. மகிந்தையை விட, ஜில்மால் காட்டுவதில் ரணில் கில்லாடி.
ReplyDelete