19 க்கு ஆதரவாக சத்தியாகிரகம்
19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என அரசியல் வாதிகளை வலியுறுத்தும் நோக்கில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவுள்ளது. உன்னத ஆட்சிமுறைமைக் கான மக்கள் இயக்கம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விரும்பும் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கோட்டை நாகவிகாரையில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாதுலுவாவே சோபித்த தேரர், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மாதுலுவாவே சோபித்த தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கான அரியதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகக் கையுயர்த்தி அரசியல்வாதிகள் நாட்டுக்குத் துரோகமிழைக்கக் கூடாது என இங்கு கருத்துத் தெரிவித்த மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார்.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படாவிட்டால் நாடு மோசமானதொரு நிலைக்குச் சென்றுவிடும். எனவே அரசியல்வாதிகள் கட்சி பேதங்க ளையும், தனிப்பட்ட பேதங்களையும் வேறுபாடுகளையும் மறந்து 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைப்போன்றதொரு சந்தர்ப்பம் இனிமேலும் கிடைக்காது. இவ்வாறான நிலையில் 19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு 20வது திருத்தச் சட்டமூலமும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளைப் போடாது 19வது திருத்தச்சட்டமூலத்தை முதலில் நிறைவேற்றி பின்னர் 20வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும்.
முடிந்தால் இரண்டையும் ஒன்றாக நிறைவேற்றலாம். அவ்வாறில்லாவிட்டாலும் முதலில் 19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர் தேர்தல்முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment