19 ஐ ஆதரிக்கும் ஜே.வி.பி. 20 ஐ எதிர்க்கிறது
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவளிப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில நல்லவிடயங்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையின் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறும் அவர், ஏனைய கட்சிகளிடமும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்ததுடன் 19 ஆவது திருத்தத்தை போட்டு முரண்பட்டுகொள்ளவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தம் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளின் யோசனைகளுக்கு அமைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்றமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யோசனைகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவர், சுதந்திரகட்சிக்கு பொறுப்பளிப்பதற்கு அப்பால், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்காக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment