கென்யாவில் 147 மாணவர்கள் படுகொலை - பயங்கரவாதி தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிப்பு
கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.
கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து தப்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.
அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாதிகள் சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் ஆப்பிரிக்க யூனியன் ராணுவம் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த படையில் ஆயிரக்கணக்கான கென்யா ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றனர். அதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அல்-ஷபாப் தீவிரவாதி முகமது மகமூத் குனோ என கூறப்படுகிறது. இவர் ராணுவத்தால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். எனவே இவர் தலைக்கு கென்யா அரசு ரூ.1.5 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடந்த காரிஸா நகரில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அல்-ஷபாப் தீவிரவாதிகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கென்யா அதிபர் உகுரு கென்யட்டா உத்தரவிட்டுள்ளார். அதற்காக கூடுதலாக போலீஸாரை தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் அண்டு கென்யா தலைநகர் நைரோபியாவில் வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 4 நாட்கள் நடத்திய தாக்குதலில் 67 பேர் உயிரிழந்தனர்.
1998 ஆம் ஆண்டு கென்யா மற்றும் தான்சான்யா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது அல்-கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 224 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாவ், அல்ஷபாப் - ""தீவிரவாதிகள்""..... ஹாஹ்ஹா, ஜப்னா முஸ்லிம் ரொம்பத்தான் மாறிவிட்டது, இது நக்கல் இல்லை.
ReplyDelete