138 பந்தில் 350 ரன் விளாசல்
இங்கிலாந்தில் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் நான்ட்விச் டவுன், கால்டி அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் களமிறங்கிய நான்ட்விச் டவுன் அணியின் துவக்க வீரர் சிம்சன் (1) விரைவில் அவுட்டாக, 3வது வீரராக களமிறங்கினார் லியாம் லிவிஸ்டோன்.
எதிரணி பவுலிங்கை வெளுத்து வாங்கிய இவர், பவுண்டரி, சிக்சர் மழை பொழிய, முதல் 47 பந்தில் 9 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.
அடுத்த 37வது பந்தில் இரட்டை சதம் (15 சிக்சர், 21 பவுண்டரி) எட்டினார். தொடர்ந்து விளாசிய இவர், 123 வது பந்தில் ‘டிரிபிள்’ சதம் (22 சிக்சர், 31 பவுண்டரி) அடித்து அசத்தினார்.
தனது விளாசலை தொடர்ந்த லிவிங்ஸ்டோன், மொத்தம் 138 பந்தில் 350 ரன்கள் (27 சிக்சர், 34 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். முடிவில், 45 ஓவரில் நான்ட்விச் டவுன் அணி 7 விக்கெட்டுக்கு 579 ரன்கள் குவித்தது. முதல் தர போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். பின் களமிறங்கிய கால்டி அணி 79 ரன்னுக்கு சுருண்டது. நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
27 சிக்சர், 34 பவுண்டரி
லியாம் லிவிஸ்டோன், 21, கடந்த ஆண்டு லங்காஷயர் அணிக்காக ஒப்பந்தம் ஆனார். ‘ஆல் ரவுண்டரான’ இவர் இதுவரை இந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
கடந்த 2014, செப்., மாதம், யார்க் ஷயர் அணிக்கு எதிரான போட்டியில், லங்காஷயர் இரண்டாம் தர அணிக்காக 204 ரன்கள் குவித்தார். தற்போது, ‘டிரிபிள்’ சதம் அடித்தார். இவர் எடுத்த 350 ரன்னில், 298 ரன்கள் 27 சிக்சர் (162 ரன்), 34 பவுண்டரிகள் (136 ரன்) உதவியால் கிடைத்தன.
எல்லாம் சிக்சர் தான்
லிவிங்ஸ்டோன் கூறுகையில்,‘‘ 100 ரன்களை கடந்ததும் அனைத்து பந்துகளையும் சிக்சராக விளாச முயற்சித்தேன். 200, 300 ரன்களை சிக்சர் அடித்து தான் கடந்தேன். மைதானத்துக்குள் விழுந்த ஒரு சில பந்துகள் ‘கேட்ச்’ ஆகாமல் போனது எனது அதிர்ஷ்டம் தான்,’’ என்றார்.
எது அதிகம்
லிவிங்ஸ்டோன் எடுத்த ரன்கள் புதிய உலக சாதனை என, செய்திகள் வெளியாகின. பின் இது தவறு எனத் தெரிந்தது. ஏனெனில், 2014, நவ., 3ல் ஊட்டி பள்ளி மாணவர் சன்குருத் ஸ்ரீராம், 15, பள்ளி அளவிலான போட்டியில் 486 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதற்கு முன் 2005ல் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அணியில் விளையாடிய ஷேசாத் மாலிக், 137 பந்துகளில் 403 ரன்கள் குவித்தார்.
மற்றபடி 2006, ஆக.,ல் வடக்கு கரோலினா லீக்கில், அமெரிக்க கிரிக்கெட் கிளப் வீரர் ஷபிர் அகமது 353 ரன்கள் எடுத்தார். இந்திய அளவில் கடந்த 2008ல் ஐதராபாத்தில் நடந்த பள்ளி அளவிலான போட்டியில் 15 வயது மாணவன் நிகிலேஷ் சுரேந்திரன் எடுத்த 334 ரன்கள் எடுத்தார்.
தற்போது, முதல் தர ஒருநாள் போட்டிகளில் லிவிங்ஸ்டோன் 350 ரன்கள் எடுத்துள்ளார்.
Post a Comment