Header Ads



இஸ்லாமிய நாகரீகங்களை 'IS பயங்கரவாதிகள் அழிக்கின்றனர் - யுனஸ்கோ கண்டனம், போர் குற்றமென்கிறது ஐ.நா.

இராக்கில் புராதன நகரமான ஹாத்ரா ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டதற்கு ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான யுனெஸ்கோ கண்டனம் தெரிவித்தது.

ரோமானியர்கள் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய அரண் நகர் ஹாத்ரா.

தற்போது இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரிலிருந்து தென் கிழக்கே, 100 கி.மீ. தொலைவில், பாலைவனத்தில் இந்தப் புராதன நகரம் அமைந்துள்ளது.

இந்தப் புராதன நகரம் ஐ.எஸ். வாதிகளால் அழிக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து, ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இது தொடர்பாக யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஐரீனா பொகோவா சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உலக கலாசாரக் கருவூலமாகக் கருதப்படும் ஹாத்ரா நகரம் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாம் அரபு ராஜ்யத்தின் தலைநகரான ஹாத்ரா, பிற்கால இஸ்லாமிய அரபு நகரங்களின் முன்னோடியாகும். இந்த நகரைத் தாக்கியிருப்பதன் மூலம், இஸ்லாமிய அரபு நகரங்களின் வரலாற்றின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

இராக்கில் நடைபெற்று வரும் கலாசார அழிப்புத் திட்டத்தில், ஹாத்ரா நகர அழிப்பு மிகப் பெரிய திருப்புமுனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்திக்குறிப்பில், யுனெஸ்கோவின் துணை அமைப்பான இஸ்லாமிய கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான இùஸஸ்கோவின் தலைமை இயக்குநர் அப்துல் அஸீஸ் அல்த்வைஜிரி உடன் கையெழுத்திட்டுள்ளார்.

எனினும், ஹாத்ரா நகரம் எப்போது, எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்து யுனெஸ்கோ எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

ஹாத்ரா அழிப்பு தொடர்பாக இராக் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

அந்நாட்டின் சுற்றுலா மற்றும் புராதனச் சின்னங்களுக்கான அமைச்சகம், ஹாத்ரா அழிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளபோதிலும், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.

தென் பகுதியிலுள்ள நினீவா மாகாணப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நூரி கூறுகையில், ஹாத்ரா நகரம் அழிக்கப்பட்ட விவரம் ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

மொசூல் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த அரிய கலைப் பொருள்களை சில நாள்களுக்கு முன்னர் ஐ.எஸ். வாதிகள் உடைத்து, அழித்தனர். அதைத் தொடர்ந்து, புராதன நிம்ருத் நகரை கனரக இயந்திரங்களைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியதாக வியாழக்கிழமை செய்தி வெளியாகியது.

நிம்ருத் அழிப்பு குறித்து இராக் அரசே செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஹாத்ரா நகரம் அழிக்கப்பட்டதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.

முன்னதாக, நிம்ருத் நகரை இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பது போர்க் குற்றமாகும் என ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.

1 comment:

  1. காட்டுமிராண்டிகள் தங்கள் இயல்பை காட்டுகின்றனர். மனித நாகரீகத்திற்கு எதிரானவர்கள் காட்டுமிராண்டிகள்.

    ReplyDelete

Powered by Blogger.