Header Ads



ரசிகர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்னை சிறந்த மனிதராகவும் சிறந்த வீரராகவும் உருவாக்கியது - சங்கா உருக்கம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையின் எதிர்ப்பார்ப்பு காலிறுதியுடன் முடிவுக்குவந்தது.

காலிறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 134 ஓட்டங்களை 18 ஓவர்களில் கடந்த தென் ஆபிரிக்கா நான்காவது தடவையாக அரை இறுதிக்கு முன்னேறியது.

இதேவேளை, ஓய்வுபெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குமார் சங்கக்கார கூறினார்.

குமார் சங்கக்கார தெரிவித்ததாவது;

    இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் அல்லது அதனைவிட சில காலம் என்னால் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். என்றாலும், இதுதான் ஓய்வுபெறுவதற்கு சிறந்த தருணமாகும். 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டிகள் தான் அதற்கு சிறந்தது. இந்தத் தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். விளையாடிய சகல போட்டிகளிலும் முழுத்திறனை வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன். பல வருடங்களாக ரசிகர்கள் எனக்குத் தந்த ஒத்துழைப்பை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்னை சிறந்த மனிதராகவும், சிறந்த வீரராகவும் உருவாக்கியுள்ளது.

 குமார் சங்கக்கார
இடது கை ஆட்டக்காரரான இவர் இதுவரை 403 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,189 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும், 93 அரைசதங்களும் அடங்கும். சங்கக்கார இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த உலகக் கிண்ணத்  தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வகிக்கிறார்.

சங்கக்கார  7 இன்னிங்சில் 541 ஓட்டங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும்சங்கக்கார விக்கெட் காப்பாளராகவும் சிறந்து விளங்கினார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் 402 பிடியெடுப்பு மற்றும் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

மஹேல ஜயவர்தன
வலது கை ஆட்டக்காரரான மஹேல ஜயவர்தன இதுவரை 447 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,646 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 77 அரை சதங்கள் அடங்கும். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தன 5 இன்னிங்சில் விளையாடி 125 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தனவால் சோபிக்க முடியவில்லை.

ஏமாற்றமாக உள்ளது: சங்கா
'தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், போட்டியில் இதுவும் ஒரு பகுதிதான். உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எண்ணியிருந்தோம். இது நடக்காமல் போனது, என்றார்.

திருப்தியை தருகின்றது:  மஹேல
இலங்கை அணியில் இடம்பிடித்தது முதல் இன்று வரை நிறை அனுபவங்களையும் நண்பர்களையும் பெற்றுள்ளேன்.   இலங்கை வீரர்களுடன் 'டிரசிங் ரூமில்' மகிழ்ச்சியாக இருந்தது திருப்தியை தருகின்றது, என்றார்.

சச்சின் வாழ்த்து
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சங்கக்கார மற்றும் ஜயவர்தனவுக்கு இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுகல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக நீண்டநாட்களாக விளையாடியுள்ளனர். இவர்களை இழந்தது இலங்கை அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.