''இப்போது தீய கனவுகள், பகலிலேயே தெரிகின்றன''
எதிர்வரும் புத்தாண்டிற்கு பின்னர் நடத்தப்படும் பொது தேர்தலில் அதிக உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என அந்த கட்சியின் தேசிய தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாகலங்கம் பிரதேசத்தில் இன்று 15-03-2015 முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் விரிவாக்கல் நடவடிக்கையின் போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகளிடமிருந்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார்.
அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடந்த அரசாங்கம், நிதி வழங்காமலேயே வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
அபிவிருத்தி பணிகள் நின்றுவிட்டன என்று எதிர்கட்சிகள் கூச்சல் போடுகின்றன. ஏன் நின்றன. கிடைக்கப் பெற்ற வங்கி முறிகளின் மூலமாக நாங்கள் 10 பில்லியன்களை பெற்று அவற்றுக்காக வழங்கியுள்ளோம்.
பணிகளை ஆரம்பிப்பதற்காக நிதி வழங்கப்படவில்லை. பெரியளவிலான நிறுவனங்களுக்கு பல வருடங்களாக அபிவிருத்திக்கான நிதி வழங்கப்படவில்லை.
வடக்கு அதிவேக வீதி பணிகளுக்காக கேள்விப் பத்திரம் கோரப்படாமல் 4 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் தமது பணிகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்;. அவர் தோற்றபின்னர் அந்த பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்று எங்களிடம் வினவினார்கள். அந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு அந்த தருணத்தில் நிதியிருக்கவில்லை.
நாங்கள் அதற்கான நிதியை திரட்டினோம். பாரியளவில் ஊழல் இடம்பெற்றிருக்கிறது. இப்போது தீய கனவுகள் பகலிலேயே தெரிகின்றன.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெற்ற கடன்களை அடைப்பதற்கு எங்கள் பிள்ளைகளின் பேரப்பிள்ளையின், பேரப்பிள்ளைதான் வரவேண்டும். அப்படியான யுகத்தைதான் அவர்கள் தோற்றுவித்துள்ளார்கள். அதற்கு ஐக்கிய தேசிய கட்சிதான் நிர்வாகத்தை பொறுப்பேற்க வேண்டும்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போது அரசியலில் புதிய யுகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நான் தனியாக இந்த அரசியலில் ஈடுபட தீர்மானிக்கவில்லை. ஏனைய கட்சிகள் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன மிகவும் சவாலான தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுத்தே இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டு;ள்ளது.
Post a Comment