ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை, ஒருபோதும் மறக்க மாட்டோம் - ராஜித சேனாரத்ன
முஸ்லிம்களில் 95 சதவீதமானவர்கள் ஆட்சி மாற்றம் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் சமூகம் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் அச்சம், பீதி, சந்தேகம் இன்றி வாழும் சிறந்த சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அட்டுளுகமையில் தெரிவித்தார்.
அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத் ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வு பண்டாரகமையில் உள்ள அட்டுளுகமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அட்டுளுகமை புளுஸ்டார் விளையாட்டுக்கழகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
அமைச்சர் மேலும் பேசும் போது கூறியதாவது,
கடந்த தேர்தலில் இன வாதிகளுக்கு மக்கள் சரியான படிப்பினையைப் புகட்டியுள்ளனர். நாட்டில் வாழும் மக்கள் இனவாதம் மதவாதம் என்பவற்றை ஆதரிக்கவில்லை. சகல இன மக்களும் சகவாழ்வு வாழ்வதையே விரும்பி மக்கள் வாக்களித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷவையும், அவருக்குப் பின்னால் இருந்த இனவாதிகளையும் மக்கள் ஒரே குழியில் போட்டு இனவாதம் இந்நாட்டுக்கு தேவையில்லை என்பதை வாக்குப்பலத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். இனவாதத்தையும், மதவாதத்தையும் கிளப்பி பெளத்த வாக்குகளை சூறையாட முயன்றவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினர்.
கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகம் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்தது.
முஸ்லிம்கள் ராஜபக்ஷ ஆட்சியை மாற்ற கைகோர்த்தனர். 95 சதவீதமான முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தது. முஸ்லிம்கள் வழங்கிய இந்த பங்களிப்பை நாம் நன்றியுடன் நினைவுபடுத்துகிறோம் என்றார்.
Post a Comment