நேருக்கு நேர் மோத வாருங்கள் - ரணில் சவால்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க முயற்சித்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அவர்களை சுற்றியுள்ள வாய்ச் சவடால் பேசுபவர்களும் ஒவ்வொரு இடமாக ஒளிந்து மறைந்து சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பொதுத் தேர்தலொன்றில் தற்போதைய அரசாங்கத்துடன் நேருக்கு நேர் போட்டிக்கு வருமாறு சவால் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்தச் சவாலை விடுத்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில் ;
மக்களால் நிராகரிக்கப்பட்ட சில நபர்கள் இருக்கின்றனர். இதற்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க முயற்சித்தவர்கள் தற்போது அவர்களும் அவர்களைச் சுற்றியிருக்கும் வாய்ச் சவடால் பேசுபவர்களும் அடிமட்ட அரசியல் இலாபங்களுக்காக எம்மீது சேறு பூச முயற்சிக்கின்றனர்.
ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலின் மூலம் அவர்கள் முறைகேடான பயன்களை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால் நிலத்தில் 6 அடி ஆழத்திற்குள் அனுப்பக் காத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நல்லாட்சி பற்றி பாடம் நடத்த வருகிறார்கள். தார்மீகம், பண்பாடு பற்றிக் கற்றுத் தர வருகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்பது எமக்கு நன்றாகத் தெரியும். தோல்வியின் விரக்தியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சேறு பூசுகிறார்கள்.
பிரச்சினைகள் பற்றி அவர்கள் செயற்பட்டதிலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமான வகையில் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பட்டிருக்கிறோம் என்பதை நாம் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
ஆகவே, ஒவ்வொரு இடமாக ஒளிந்து மறைந்து சேறு பூசாமல் பொதுத் தேர்தலொன்றுக்கு வந்து எம்முடன் நேருக்கு நேர் போட்டிக்கு வருமாறு நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன்.
நல்லாட்சியின் நிமித்தம் மக்கள் எம்முடன் இணைந்திருக்கிறார்கள். நேர்மை, நீதி, சுபிட்சம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். சுதந்திரத்தின் நிமித்தம் அவர்கள் எம்முடன் இணைந்திருக்கிறார்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்த பயணம் தொடர்பில் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாம் அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்க மாட்டோம். ஆரம்பித்த சவால் மிக்க இந்தப் பயணத்தை நாம் வெற்றிமிக்கதாக்கிக் கொள்வோம். நாம் இந்தப் பயணத்தை தொடருவோம் என்றார்.
Post a Comment