ஐக்கிய தேசியக்கட்சியின் தீர்மானத்திற்கு, சுதந்திர கட்சி கண்டனம்
தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்திய பின்னரே பொதுத்தேர்தலை நடாத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் தனித்தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
நடைமுறையில் இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறைமையுடனேயே அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே எதிர்க்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினருமான நிமல் சிறி பால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவதுதேசிய அரசாங்கம் அமைத்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியினரே முதலில் தேர்தல் முறைமையில் மாற்றம் தேவையென கூறினர்.
தேசிய அரசில் நாம் அங்கம் வகிக்காவிடினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசுடன் உள்ளார். எனவே அவரின் கோரிக்கைகளுக்கு நாம் கட்டுப்படுவதாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்த வேண்டும் என்ற காரணத்தாலும் அவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுகின்றோம். ஆரம்பத்தில் அடுத்த பொதுத்தேர்தலின் முன்னர் தேர்தல் முறைமை மாற்றப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டது. நாமும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம்.
புதிய தேர்தல் முறைமையில் எல்லை நிர்ணயம் சரியாக செய்ய வேண்டும். எல்லை நிர்ணயங்களை செய்து அதற்கமைய சிறு கட்சிகளையும் பாதிக்காத வகையிலேயே அடுத்த பொதுத்தேர்தலை நடாத்த வேண்டும்.
அதற்கான கால அவகாசம் உள்ளது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி தமது தேவைக்கேற்ப குழப்பியடித்து ஏதோ ஒரு வகையிலாவது அதிகாரத்தினை கைப்பற்ற திட்டம் தீட்டுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தனித்த தீர்மானங்கள் அனைவரையும் பிரதிபலிக்குமென கூற முடியாது.
அதேபோல் இத்தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் தனித்த தீர்மானம். இதில் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற தேவையில்லை. இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தீர்மானம் எடுக்கப்படும். இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட குழு கூடுகின்றது.ஜனாதிபதி தலைமையில்எமதுகட்சி உறுப்பினர்கள் இவ்விடயம்தொடர்பில் கலந்தாலோசித்துதேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment