'உலகின் அசிங்கமான பெண்' சகோதரியின் வாழ்க்கை மாறுகிறது..!
அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த லிஸி வேலஸ்க்யூஸுக்கு அப்போது 17 வயது. ஒரு தடவை ஆன்-லைனில் மெயில் செக் செய்துகொண்டிருந்தபோது, ‘The World's Ugliest Woman’ (உலகின் அசிங்கமான பெண்மணி) என்ற தலைப்பில் தனது இன்பாக்ஸுக்கு வந்த ஒரு வீடியோ லிங்க்கை க்ளிக் செய்த லிஸிக்குப் பேரதிர்ச்சி. காரணம் - உலகின் அந்த அசிங்கமான பெண்மணி தான்தான் என்று அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது.
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அவருக்கு இருக்கும் நோய்களையும் விவரமாகப் படம்பிடித்து அந்தத் தலைப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள் சில விஷமிகள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வீடியோவுக்கு வந்த கமென்ட்டுகள் கொடூர ரகத்தைச் சேர்ந்தவை.
‘இவளைப் பார்ப்பதற்கு நான் குருடாகவே இருந்துவிடுவேன்!’
‘இன்னுமா இவளை பெற்றோர் உயிருடன் வைத்திருக்கிறார்கள்?’
‘இவளை நெருப்பில் எரித்துவிடலாம்!’
‘இவள் தற்கொலை செய்து கொள்வதுதான் நாட்டுக்கு நல்லது!’
- என்று இரக்கமே இல்லாமல் வந்திருந்த கமென்ட்டுகளைப் படித்துவிட்டு, பல வருடங்கள் தூங்காமல் அழுது புரண்டார் லிஸி.
வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை கிடையாது; இடது காது அறவே கேட்காது; எலும்புகளின் அடர்த்தி மிகவும் குறைவு; எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது; வலது கால் அடிக்கடி வளைந்து, எலும்பு முறிவு ஆகும் அபாயம் என்று பெயர் தெரியா நோய்களுக்கு நடுவில் வாழ்ந்து வரும் லிஸிக்கு, இப்போது வயது 26. எடை 27 கிலோ மட்டுமே.
‘உலகின் அசிங்கமான பெண்மணி’ என்று வீடியோவில் வலம் வந்த லிஸி, இன்று உலகின் அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூ- ட்யூப் சேனலின் https://www.youtube.com/user/lizzitachickita உரிமை யாளர்களில் ஒருவர். லிஸியை மையமாக வைத்து இப்போது ஹாலிவுட்டில் ஒரு டாக்குமென்டரி படமும் தயாராகி வருகிறது. இப்போது அமெரிக்காவில் உள்ள மில்லியனர்களில் லிஸியும் ஒருவர்.
‘‘பள்ளிப் பருவத்தில் நான் ஏகப்பட்ட கேலிகளையும், கிண்டல் களையும் சந்தித்தேன். ‘என்னை ஏன் கருவிலேயே கலைக்கவில்லை’ என்று என் பெற்றோரிடம் சண்டை போட்டேன். எனது டீன்-ஏஜில் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். தற்கொலை எண்ணம்கூட அடிக்கடி வரும். ஆனால், எனக்கே இப்படி இருந்தால் என்னைப் பெற்றவர்கள் எவ்வளவு அவமானப் பட்டிருப்பார்கள் என்று தோன்றியது.
எந்த தோற்றத்தை வைத்து என்னைக் கேலி செய்தார்களோ, அதே அழகின்மையை வைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னை வைத்து வீடியோ தயார் செய்தவர்களின் லிங்க்கைக் கண்டுபிடித்தேன். ‘நீங்கள் என்ன என்னைப் பற்றி வீடியோ வெளியிடுவது... நானே வெளியிடுவேன்’ என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்து, என்னுடைய அத்தனை வீடியோக்களையும் அப்லோட் செய்து, ‘அழகாகப் பிறக்காதது என் தவறல்ல; அடுத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள்’ என்ற கோரிக்கையை மையமாக வைத்து யூ-ட்யூப் சேனல் ஒன்று ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு நாளும் சந்தாதாரர்கள் பெருக ஆரம்பித்தார்கள். அடுத்தவர்களைக் கேலி செய்வது உலக மகா பாவங்களில் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்று எனக்குச் ஆதரவான கமென்ட்கள் வந்து குவிந்தன. இப்போது என் சேனலுக்கு 3.5 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றிப் படம் எடுத்து வெளியிட்டிருக்கும் இயக்குநர் சாராவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!’’ என்று பளிச்செனச் சொல்கிறார் லிஸி.
ஆஸ்டினில் நடந்த சவுத்வெஸ்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'A Brave Heart: The Lizzie Velasquez Story' என்ற பெயரில் 75 நிமிட டாக்குமென்டரி படம் ஒளிபரப்பாகி, அமெரிக்கா முழுதும் செம ஹிட் அடித்திருக்கிறது. ‘‘இது லிஸியின் தன்னம்பிக்கைக் கதை மட்டுமல்ல; வன்கொடுமை என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதையும்; தன்னம்பிக்கை இழப்பவர்கள் அதை எப்படி வெற்றி கொள்வது என்பதையும் இந்தப் படம் சொல்கிறது!’’ என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் சாரா ஹ்ரிஷ் போர்டோ.
லிஸி, இப்போது உலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்கை நிறைந்த பெண்!!
Post a Comment