Header Ads



கட்டார் அமீர் இலங்கை வருகிறார்


-Mahdoom-

கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்டார் உயர் மட்ட தூதுக் குழுவுடன் மிக விரைவில் இலங்கை வரவுள்ள கட்டார் அமீர் இலங்கை ஜனாதிபதி உட்பட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அறிய வருகிறது.

கட்டார் இயற்கை கேஸ் வாயுவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக விளங்குகின்றது.

கட்டார்-இலங்கை இராஜ தந்திர உறவுகள் கட்டி எழுப்பப்பட்டு 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இலங்கை கட்டாருடன் தொடர்ந்தும் பொருளாதார மற்றும் ஏனைய அனைத்து மட்டத்திலும் நல்லுறவைப் பேணி வருகிறது. அங்கு ஓர் இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர் தொழில் புரிந்து வருகின்றனர்.

கட்டார் அமீரின் இலங்கைக்கான குறித்த விஜயம் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, இருநாட்டு பொருளாதார உறவுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் அதேவேளை வர்த்தக பரிமாற்ற அளவை அதிகரிக்க செய்யும் என தெரிவிக்கப் படுகிறது.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்டார் அமீர் அஷ் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி, துணை அமீர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஹமத் அல் தானி, அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாசர் பின் கலீஃபா அல்-தனி, இலங்கைக்கான கட்டார் தூதுவர் றாஷித் பின் ஷபீஃ அல் மர்ரீ ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதியின் வெற்றிக்காகவும், முன்னேற்றத்துக்காவும் பிரார்தித்திருந்தமை குறிபிடத்தக்கது.

No comments

Powered by Blogger.