புற்றுநோயை கண்டுபிடிக்கும் நாய்
கழுத்துப் பகுதியில் தைராய்ட் சுரப்பியில் புற்று நோய் பாதிப்புள்ளதா என்பதை மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் நாய் குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்ஸா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் பிரிவுத் தலைவர் டானல்டு போடென்னர் இது குறித்து தெரிவித்ததாவது:
தற்போது தைராய்டு புற்று நோயைக் கண்டுபிடிக்கும் முறைகள் உறுதியான தகவல்களைத் தருவதில்லை. பல முறை பரிசோதனைகள் நடத்தி, பல முறை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
நாய்க்கு இருக்கும் மோப்ப சக்தி கொண்டு தைராய்டு புற்று நோய் இருப்பதை உறுதி செய்ய முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தைராய்டு புற்று நோய் பாதிப்புள்ளவரின் சிறுநீர் மாதிரிகளை முகரச் செய்து, ஃபிராங்கி எனும் நாய்க்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
புற்று நோய் அறிகுறியிருந்தால் உட்கார வேண்டும் என்றும், உயிருக்கு ஆபத்தில்லாத தன்மையுள்ள நோய் பாதிப்பானால் தலையைத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்றும் ஃபிராங்கிக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவ்வகை நோய்க்கான பரிசோதனைக்காக முதல் முறையாக மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வந்த 34 நோயாளிகளின் சிறுநீர் மாதிரிகளை அந்த நாய் முகர்ந்து பார்த்தது.
அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர், அவர்களின் சிறுநீர் மாதிரிகள் அந்த நாயிடம் அளிக்கப்பட்டன. அவர்களின் மாதிரிகளை முகர்ந்த பின்னர், அந்த நபர்களின் நோய் நிலவரத்தை ஃபிராங்க்கி குறிப்பிட்டுக் காட்டியது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, 30 பேரின் உடல் நிலை குறித்து ஃபிராங்கியின் கணிப்பு சரியானது எனத் தெரிய வந்தது.
நாயின் இந்த மோப்பத் திறனை எவ்வாறு மருத்துவ இயலில் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதென மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதென்று டானல்டு போடென்னர் கூறினார்.

Post a Comment