முஸ்லிம் கலை, இலக்கியங்களை ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு..!
(கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ்)
கலைஞர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள், தத்துவவியலாளர்கள் எனப் போற்றப்படும் மேதைகள் காலத்தால் அழியாதவர்கள். அவர்களது படைப்புக்கள் என்றும் நிலைத்து வாழ்பவை. அதனிலும் சிறப்பு யாதெனில் அவர்களது சிந்தனைக் கருத்துக்கள் உலகம் உள்ளவரை நிலையா தர்மமாகப் பிரகாசித்து பலருக்கு அறிவொளியூட்டிவருவதாகும்.
அந்த அடிப்படையில் சுமார் 200 வருடங்களுக்குற்பட்ட காலத்தில் தற்போதைய நிலை போன்று ஊடகங்கள் இருக்க வில்லை. அச்சு ஊடகங்கள் கூட மிக அரிதான காலம். அப்படியான ஒரு காலக்கட்டத்தில் அறிஞர் சித்திலெவ்வை என்றும், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் என்றும், கசாவத்தை ஆலீம் அப்பா புலவர் என்றும் மலையகத்தில் மிளிர்ந்த மேதைகளின் ஆக்கங்கள் இன்றும் சாகாவரம் பெற்றுள்ள போதும் அவர்கள் மரணித்துப் பல்லாண்டுகளாகின்றன.
ஒரு சிலர் கசாவத்தை ஆலிம் அப்பாவையும், அருள்வாக்கி அப்துல் காதர் அவர்களையும் யார்? என்று கேட்டும் ஒரு துர்பாக்கிய நிலையைக் காணமுடிகிறது. ஆனால் ஏதோ ஒருவகையில் அறிஞர் சித்திலெவ்வை பற்றி எச்ச சொச்சங்கள் பாக்கியாகி உள்ளன. காரணம் சித்தி லெவ்வை மகா வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு கல்விக் கூடமும், சித்திலெவ்வை அவர்களை நினைவு கூறும் முத்திரையும், முஸ்லிம் நேசன் என்ற பத்திரிகையும், ஹசன்பே சரிதை என்ற ஒரு நூலும் நினைவு கூறப்பட்டு வருவதால் சித்தி லெவ்வை பற்றி அவ்வப் போது நினைவு கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த அருள் வாக்கி பற்றி கசாவத்தைப் புலவர் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஒரு சமூகம் குறிப்பி;ட காலப்பகுதியில் வாழ்ந்தது என்றால் அதன் முகவரியாக அவர்களது கலாச்சாரங்களும் கலைகளும் ஆங்காங்கே காணப் படும். சில சமயங்களில் சீர்திருத்த வாதிகள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட சில சமூக துரோகிகள் அப்படியான தடயங்களை அழித்து வருவது எந்தளவு சரி என்பது விவாதிக்கப்பட வேண்டியது.
அண்மைகாலமாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிரியா போன்ற முக்கிய நகரங்களிலும் அதற்கு சில காலங்களுக்கு முன் ஈரான், ஈராக், பஃதாத் போன்ற இடங்களில் யுத்தம் காரணமாகவும் அதற்கு முற்பட்ட காலத்தில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான்களாலும் பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ் இயக்கங்களுக்கு அவ்வப் போது இஸ்லாமிய முத்திரைகள் குத்தப்பட்ட தீவிர வாதிகளே அவற்றை அழித்தனர் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் உண்மையான இஸ்லாமிய பற்றாளர்களா என்பது இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை. எப்படியோ எமது வரலாறுகளின் சில பகுதிகள் அழிக்கப்ட்டுள்ளன என்பது மட்டும் வெளிச்சம்.
இலங்கை முஸ்லிம்கள் எவ்வளவு காலமாக வாழ்கின்றனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளை தேடிப்பிடிக்க எம்மில் என்ன அதாரங்கள் உண்டு என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது. அரேபியர் வருகையுடன் இலங்கை முஸ்லிம்களது சம்பவங்களை இணைக்க முற்பட்டாலும் 'முஸ்லிம்' என்பது இஸ்லாத்துடன் இணைந்தது. எனவே எப்படி கண்டு பிடித்தாலும் 1400 வருட வரலாறறிற்கு மேல் செல்ல முடியாது. எப்படியோ 1000 வருடம் என்று பாhத்தாலும் எம்மில் என்ன தடயங்கள் இருக்கின்றன. இருக்கும் தடயங்களையாவது நாம் பாதுகாப்பதும் இல்லை. அவை பற்றிய தேவையும் எமக்கில்லாமை ஒரு துர்ரதிஷ்டமே.
நிலைமை இப்படி இருக்க ஒருவரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதை அறியாத நிலையில் கண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆங்கில மொழி மூலம் இலக்கியத்துறையில் ஈடுபாடுகள் காட்டி பல்வேறு பாராட்டுக்களைப பெற்று வந்த அதே நேரம் கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் அவரது சகோதரனும் கவிதை மற்றும் இலக்கிய ஆக்கத் துறையில் இயல்பாகவே ஈடுபாடுகாட்டி வந்தததைப் பெற்றோர்கள் கண்டு கொண்டனர்.
அவர்களது நீண்ட அவதானிப்பின் படி அவர்களுக்கு அத்துறை தானாகவே வந்துள்ளமையை கண்டறிந்த பெற்றோர் அதன் பின்னணியை அறிய முற்பட்டனர். அப்போதுதான் தெரிய வந்தது. அன்று வாழ்ந்த அருள்வாக்கி அப்துல் காதர் புலவரது பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள் என்று. அதாவது அப்துல் காதர் புலவரின் மகள் கரீமா, அவர் மகள் ரஹ்மா பீபி, அவர்மகள் நூருள் பவுசியா, அவர் மகள் சஹ்லா மொஹிதீன் அவருடைய மகளாகப் பிறந்த ஹாலா மரிக்கார் தான் இந்த சிறுவயதில் சக்கை போடு போடும் ஒரு இளம் கவிஞையாக மினிர்துள்ளார்.
அதேபோல் அவர் சகோதரன் பிலால் மரிக்காரும் ஒரு இளம் கவிஞராகவும் எழுத்தாளராகவும் வளர்ந்து வருகிறார்.
அதே நேரம் மறு புறமாக அறிஞர் சித்திலெவ்வை மரைக்காரின் மகனின் மகன் என நான்காவது பரம்பறையில் உதித்த ஹசன் மரிக்காரின் பிள்ளைகளே இந்த ஆலா மரிக்காரும், பிலால் மரிக்காருமாவார்கள். எனவே கம்பன் வீட்டுக் கட்டுத் தரியும் கவிதை பாடும் என்பதை இங்கு காணக் கூடியதாக உள்ளது.
அதேநேரம் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் தொடர்பாகவும், அறிஞர் சித்தி லெவ்வை மரிக்கார் தொடர்பாகவும் தமது பிள்ளைகளின் நல்வாழ்வு கருதி நிறைய விடயங்களை இப்பிள்னைகளது தகப்பான ஹசன் மரிக்கார் சேகரித்து வைத்துள்ளார். எனவே ஆய்வு நோக்குடன் அல்லது உயர்கல்விக்காக ஆக்கங்களை எழுதுவோர் தமக்குத் தேவைப்படின் அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக அறிஞர் சித்திலெவ்வையின் எழுதுகோளை தொட்டு எழுதும் மையை ஊற்றிவைக்கும் குப்பியை கூட உடன் வைத்துள்ளார். அதாவது சித்திலெவ்வை பாவித்த மைக்கூட்டையும் சேகரித்து வைத்துள்ளார்.
அத்துடன் அருள்வாக்கி அப்துல் காதர் தொடர்பான நிறையத் தகவல்கள் வைத்துளளார். அவ்வாறு உள்ளவற்றில் நான் பெற்றுக் கொண்ட ஒரு சிலவற்றைக் குறிப்பிடுவது நல்லது. இவர் தெல்தோட்டைப் பகுதியில் பிறந்தவர். இவர் 1866ம் ஆண்டு முதல் 1918 வரை 52 வருடங்கள் வாழ்ந்துள்ளார். ஏரத்தாழ இதற்கு சற்று முன் சித்தி லெவ்வை மரைக்காரும் 1838.6.11 முதல் 1898.2.5 வரை வாழ்ந்துள்ளார். எனவே இவர்கள் சற்றேரக்குறைய சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.
அப்துல் காதர் புலவர் அட்டதானி வித்துவத் தீபம், மெய்ஞான அருள்வாக்கி போன்ற வேறு சில பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளார்.30 மேற்பட்ட படைப்புக்களை ஆக்கியுள்ளார். உதாரணமாக கண்டி அருள்மணிமாலை, கண்டி நகரப்பதிகம், நவமணித் தீபம், ஞானப் பிரகாச மாலை எனப் பல கலை இலக்கியங்களை ஆக்கியுள்ளார்.
; இரண்டு அறிஞர்களது ஐந்தாவது பரம்பரையில் உதித்தவர்களது திறமையின் ஒரு சில துளிகளை இனிச் சற்று பாhர்ப்போம்.
ஹாலா மரிக்கார்.
இவர் தற்போது கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 10ம் தரத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வருகிறார். தற்போதுதான் 14 வயதை எட்டியுள்ளார். இவர் தனது 9 வது வயதில் ஐக்கிய ராஜ்யத்தில் ளுயஅpயன (சம்பெட்) நிறுவனம் வெளியிட்ட 'ஜேனிஸ்' (துழரசநெலள) என்ற நூலில் 24 வது பக்கத்தில் இவரது ஆக்கம் ஒன்று வெளியானது. 'வோண்டபுல் வெஹிகள்' என்ற அந்த ஆக்கம் அவ்வருடத்திற்கான முதற் பரிசைப் பெற்றது. அதேபோல் சன்டே டைம்ஸ் மற்றும் பாட்டா நிறுவனம் இணைந்து நடத்தும் மாதாந்த எழுத்துறைப் போட்டிகளில் 17 முறை பரிசு பெற்றுள்ளார். இளவரசர் வில்லியம்ஸ் அவர்களின் திருமணத்தின் போது எவர் எழுதி அனுப்பிய ஒரு வாழ்த்துக் கவிதையைப் பாராட்டி இளவரசரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மிரர், மற்றும் டைம்ஸ் பத்திரிகைளில் சுமார் 55 ற்கும் மேற்பட்ட சிறுவர் ஆக்கங்களை எழுதியுள்ளார். இப்படியாகப் பல்வேறு ஆக்கங்களை எழுதி பாராட்டப்பட்டது மட்டும்லலாது அவற்றை முறையாகச் சேகரித்தும் வைத்துள்ளார்.
பிலால் மரிக்கார்.
தற்போது கண்டி திருத்துவக் கல்லூரியில் 11ம் வகுப்பில் கல்வி பயிலும் இவரும் எழுத்துத் துறையில் நிறைய சாதத்துள்ளார்.2014 ல் நடத்தப்பட்ட ஆங்கில கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற இவர் அகில இலங்கை ரீதியில் கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். 2013ம் ஆண்டு நடத்தப்ப்ட சர்வதேச தண்ணீர் தினப் போட்டியில் இவர் நிர்மாணித்த ஒரு ஆக்கம் காரணமாக 150 000 ரூபா பெறுமதியான பரிசு கிடைக்கப் பெற்றது. அது திருத்துவக் கல்லூரியின் பல்லேகலை மைதானத்தில் சிறிய குடிநீர் திட்டம் ஒன்று அமைப்பதற்காக வழங்கப்பட்டது.
எனவே அறிஞர் சித்திலெவ்வை அல்லது அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் பற்றி தகவல்களைப் பெற விரும்பினால் ஹசன் மரிக்கார்.546, பொல்வத்தை, கொஹாகொடை, கட்டுகாஸ்தோட்டை என்ற முகவரியிலோ அல்லது 0772664679 என்ற தொலைபேசியுடனோ தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment