கொந்தளிப்பை நோக்கி, இலங்கை அரசியல்..!
எவன்கார்ட் தொடர்பான குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ரணில் தரப்பினர் ஈடுபட்டு வருகின்ற விடயத்தில் தற்போது ஆளும் தரப்புக்குள் பெரும் நெருக்கடி நிலை தோன்றி இருக்கின்றது. குற்றம் சாட்டப்படுகின்றவர்களைப் பாதுகாக்கின்றவகையில் அது சட்டரீதியான விவகாரம்தான் எனவே அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடவுச்சீட்டுக்களைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் ரணில் விக்கிரமசிங்ஹவின் மருமகனுமான விஜேவர்தன கட்டளை பிறப்பத்திருக்கின்றார்.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இது எப்படி நடந்தது என்று ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளரிடம் விடயம் அறிந்தவுடன் தொலைபேசியில் கேள்வி எழுப்பிய போது இதுபற்றி நாம் உங்களுக்கு எழுத்து மூலம் அறியத் தந்திருந்தோமே அதற்கு உங்கள் அமைச்சிலிருந்து பதிலும் கிடைத்திருக்கின்றது. அதன்படிதான் இது நடந்திருக்கின்றது என்று பாதுகாப்புச் செயலாளர் பதில் கொடுத்திருக்கின்றார்.
இந்த பதில் ஜனாதிபதிக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி மேலும் தேடிப்பார்த்த போது ஜனாதிபதி பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சராக இருக்கின்ற நேரத்தில் அவருக்குத் தெரியாது இந்த முடிவை எடுத்திருக்கின்றார் விஜேவர்தன என்பது தெரியவந்திருக்கின்றது.
தான் இப்படி ஒரு கடிதத்தை பார்க்கவே இல்லை என்று அடித்துக் கூறுகின்ற ஜனாதிபதி ருவன்விஜேவர்தன நடவடிக்கைகளினால் தற்போது கடும் அதிருப்த்தியில் இருக்கின்றார். எனவே இந்த விவகாரமும் நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படும் என்று தெரிகின்றது.
மஹிந்த இரத்தினபுரியில் களமிறங்குகின்றார்!
மஹிந்த விசுவாசிகளின் அடுத்த கூட்டம் இரத்தினபுரியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. நுகேகொடையிலும் கண்டியிலும் நடந்த கூட்டங்களுக்குத் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனமைக்கு தான் ஏற்கெனவே போட்டுக்கொண்ட வேலைத் திட்டங்கள் காரணமாக இருந்தது.
எனவேதான் தன்னால் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனவே அவர் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கின்றார் என்பதுதான் இதன் மூலம் உறுதியாகத் தெரிகின்றது.
இரத்தினபுரியில் நடக்கின்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. ராஜபக்ஷ இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டால் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் துணிந்து மேடையேற இருக்கின்றார்கள் என்று எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தனது பலத்தை நாட்டுக்கும் புதிய மைத்திரி அரசுக்கும் நிரூபிக்க ராஜபக்ஷ முனைகின்றார் என்றுதான் தெரிகின்றது.
நாளை ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பலப்பரீட்சை
இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை தோன்றி இருக்கின்றது ஆளும் தரப்பாகவுள்ள சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களிடையே தற்போது மோதல் பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கின்றது.
தேர்தல் சீர்திருத்தங்களை செய்துவிட்டே அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஆளும் தரப்பிலுள்ள மைத்திரியின் சுதந்திரக் கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சிலுள்ள ஒரு சிலரும் வாதிடுகின்றார்கள்.
பெரும்பாலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தமது வெற்றி வாய்ப்பு புதிய தேர்தல் முறையில் ஆபத்தாகி விடும் என்று கருதுவதால் தேர்தல் முறையில் மாற்றங்கள் நடைபெறுவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் தேர்தல் திருத்தங்களுக்குப் பின்னரே பொதுத் தேர்தல் என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் லண்டனில் இருக்கின்ற நேரத்தைப் பார்த்து ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தல் பற்றி தனது செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கையால் ஜனாதிபதி கடும் கோபத்தில் இருக்கின்றார் எனவேதான் 15ம் திகதி ஜனாதிபதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி இருக்கின்றார். எனவே நாளை நடக்கின்ற இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெறும் என்பது உறுதி;
இதற்கிடையில் ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு புதியவர் ஒருவரைப் பிரதமராக்கி தேர்தல் மாற்றங்களை மேற் காள்வது பற்றியும் சுதந்திரக் கட்சியில் சிலர் பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டு வருகின்றனர் என்றும் தெரிய வருகின்றது.
அணுரகுமர-விஜேயதாச பனிப்போர்
ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்கவுக்கும் நீதி அமைச்சர் விஜேதாசாவுக்குமிடையே தற்போது கடுமையான பனிப்போர் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும் விவகாரம் முடிந்த பாடில்லை.
தன்னிடம் அணுரகுமார திசநாயக்க ஜேவிபி தேர்தல் செலவுக்கு 25 இலட்சம் ரூபாய்களை வாங்கினார் என்று குறிப்பிட்டு அவரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் விஜேதாச. அப்படி ஜேவிப்பிக்குப் பணம் வாங்க வேண்டிய தேவையில்லை நாம் பணம் வாங்கி இருந்தால் நிரூபிக்குமாறு அவர் தற்போது சவால் விடுத்திருக்கின்றார்.
விஜேதாசவின் அழைப்பபைத் தான் ஏற்றுக் கொண்ட போதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் அழைத்து இது விடயத்தில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்று விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தான் இது விடயத்தில் மௌனமாக இருந்ததாக அணுரகுமார தற்போது அறிவித்திருக்கின்றார். தேவைப்பட்டால் விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகின்றார்.
JVP never get money from anyone sure.
ReplyDelete