ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை இலங்கை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் - தி.மு ஜயரத்ன
பயங்கரவாத அமைப்புக்களான அல்கொய்தா மற்றும் தலிபான் ஆகியவற்றின் வரிசையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பையும் இலங்கை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன நேற்று சபையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார். உறுப்பினர் தி.மு.ஜயரத்ன இங்கு மேலும் கூறுகையில்,
சர்வதேச அமைப்புக்கள் தமக்கு ஏற்றவாறு செயற்படுகின்ற அதேவேளை தாம் நினைத்தவாறு தீர்மானங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய அமைப்புக்கள் தமக்கு கட்டுப்பட்டு நடவாத நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முற்படுகின்றன. இதனை ஏற்க முடியாதுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு தலைகளை வெட்டி மனிதப்படுகொலைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்ந்து செல்கின்றது. எனவே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை அல்–கொய்தா மற்றும் தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் வரிசையில் இலங்கை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
Post a Comment