அட்டாளைச்சேனை முகைதீன் வீதியை கவனிப்பார்களா..?
(ஏ.எல்.நிப்றாஸ்)
அட்டாளைச்சேனை-15ஆம் பிரிவு தைக்கா நகரிலுள்ள முகைதீன் வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழை நேரங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு - கொழும்பு ஏ4 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள இவ் வீதியின் ஆரம்பப் பகுதியே கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்கள், மற்றும் பிரதேசவாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். கலாநிதி தீன் மொஹமட் போன்றோரது வீடுகள் அமைந்துள்ள இவ்வீதி மிக மோசமாக காட்சியளிப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இரு வருடங்களுக்கு முன்னர் இவ்வீதியின் ஒரு பகுதிக்கு வடிகான் அமைக்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்ட அடிப்படையில் இது அமைக்கப்படவில்லை என்பதுடன் பிரதான வடிகானுடன் இது முறையாக இணைக்கப்படவும் இல்லை. கிறவல், மணல் கலந்த வீதியாக இது காணப்படுவதால் மழை பெய்யும்போது வடிகானில் மணல் மற்றும் குப்பைகள் நிரம்புகின்றன. இதனால் நுளம்பு பெருகும் அபாயமும் காணப்படுகின்றது.
இவ்வீதியை தார் வீதியாக புனரமைப்புச் செய்வதற்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அறியமுடிகின்றது. இருப்பினும் மாகாண சபை ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால் இச் செயற்றிட்டம் இன்னும் செயலுருப் பெறவில்லை. இதனால் மேற்படி முகைதீன் வீதி கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதேவேளை அதற்கு அருகிலுள்ள வேறு ஒருசில வீதிகளிலும் இந்நிலை காணப்படுகின்றது.
எனவே, மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண சபை அதிகாரிகள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி முகைதீன் வீதியை முறையாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
எங்கே அந்த குடிமகன் மா உ?
ReplyDelete