Header Ads



விருப்பு வாக்கு தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் - ஜனாதிபதி மைத்திரி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீதமான அதிகாரங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்புக்கு இணையாக விருப்பு வாக்கு தேர்தல் முறை இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்கு தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்திற்குள் வழங்கிய வாக்குறுதியின் படி தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யும் அடிப்படை பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விருப்பு வாக்கு முறைக்கு மாறான, நாட்டுக்கு பொருத்தமான மற்றும் தகுதியான தேர்தல் முறை தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்ததாகவும் தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கை தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புதிய தேர்தல் முறையை உருவாக்க தேவையெனில் துணைக்குழு ஒன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பண பலத்தில் அரசியலுக்குள் பிரவேசித்து விருப்பு வாக்கு முறையை பிரயோசனப்படுத்துவதனால், அரசியல்வாதிகளுக்கு இருந்த கௌரவமும் குணதிசயமும் சீர்கெட்டு போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், செயலாளர்களும் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.