வடமேல் மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு - ஆசிரியர் சங்கத்தின் சந்திப்புக்கு வெற்றி
புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களைக் கொண்ட வடமேல் மாகாணம் 1213 முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகளைக் கொண்டது. அத்தோடு 08 கல்வி வலயங்களையும் கொண்டுள்ள இம்மாகாணத்தில் 28,012 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றார்கள்.
இக்கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் 2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நியமனம்பெற்ற கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் நடைமுறையிலுள்ள சம்பளச் சுற்று நிருபங்களுக்கு முரணாக மாகாண அரச சேவை ஆணைக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 2007.09.04 இல் நியமனம் பெற்றவர்கள் 14,135 ரூபவையும் 2008.06.26 இல் நியமனம் பெற்றவர்கள் 14,495 ரூபாவையும் 2009.07.03 இல் நியமனம் பெற்றவர்கள் 14,315 ரூபாவையும் ஆரம்பச் சம்பளப் படியாக்க் கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்
அரசு, சுற்றறிக்கைகள் மூலம் சம்பளத் திட்டத்தை மாற்றாத வரை ஆண்டுகள் மாறும் போது அமர்த்தப்பட வேண்டிய ஆரம்பச் சம்பளப்படி எச்சந்தர்ப்பத்திலும் மாறாது.
அதன்படி இந்நியமனதாரிகள் சேவைக்கு வரும் போது 2007.06.01 முதல் அமுலில் இருந்த 06/2006 இலக்க சுற்றறிக்கைப்படி சேவையின் வகுப்பு 3 தரம் 1 இக்கான 14,135 – 9 x 180 – 6 x 180 - 16,835 ரூபா என்ற சம்பளத் திட்டத்தில் அமர்த்தப்பட வேண்டிய சம்பளப் படிநிலை சகலருக்கும் 14315 ரூபாவாகும்
இது இச்சம்பளத் திட்டத்தின் இரண்டாவது சம்பளப் படி நிலையாகும். இதன்படி 2007 மற்றும் 2008 க்களில் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களின் அமர்த்தப்பட்ட ஆரம்பச் சம்பளப் படி நிலைகள் தவறாகும்.
இந்தத் தவறு தொடர்பில் உரிய காலத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்கழு சபைச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கொண்டு வந்திருந்தது.
இருந்த போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் இது வரை எடுக்கப்படாமையினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தீர்மானித்தது. அதன்படி இடம்பெற்ற சந்திப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.
புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.பி.எஸ்.கே. விஜேசிங்க, ஆசிரியர் தாபனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.சி. திஸாநாயக்க, கணக்காளர் செல்வி யூ.எ.வி.டி. திஸாநாயக்க தமிழ்ப் பிரிவிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எ. சன்ஹிர், நிருவாக உத்தியோகத்தர் திருமதி எச்.எம்.பி. ஹேரத் ஆகியோரையும்
மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜே.ஜி.என். திலகரத்ன, மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.எம். பிரேமாவதி, பிரதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் பி.டி. நஸீர் ஆகியோரையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம். அனஸ் மற்றும் வடமேல் மாகாண இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளரும் புத்தள மாவட்ட இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளருமாகிய எஸ்.எஸ்.எம். றசாத் உள்ளிட்ட குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன் போது மாகாணக் கல்விப் பணிப்பாளரினாலும், வலயக் கல்விப் பணிப்பாளரினாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு
தேசியத் தலைவர் எம். அனஸ் - 077 23 99 156
எஸ்.எஸ்.எம். றசாத் – 071 44 84 884
ஏ. சி. எம். ஹக்மான் – 071 82 56 415
Post a Comment