Header Ads



அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னரே தேர்தல் - அடித்துச்சொல்கிறார் ஜனாதிபதி (படங்கள்)

அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை இன்று 18.03.2015 சந்தித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

பல்வேறு தரப்பினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் பூரண இணக்கப்பாட்டிற்கு அமைய, அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, அந்த திருத்தத்தை மேற்கொண்டதன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரதான அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறினார்.

சர்வதேச ரீதியில் நாட்டிற்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கருத்திற்கொள்ளும் போது, தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவிற்கு எவராலும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கும் எதிர்காலத்தில் யுத்தமொன்று ஏற்படாதிருப்பதற்கும் தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவே தீர்வாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பவற்றில் தானே தலைவர் என்பதனால், கொள்கை மற்றும் அரசியல் விழுமியங்களை ஏற்படுத்தி அடுத்த தேர்தலின் பொழுது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிர்வகிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 எதிர்வரும்  தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டுக்கும் ஆதரவாக குரல் கொடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய் நன்றி மறக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமான சட்டவாக்கத்தினர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்குவோர் இடையில் தற்போது இது தொடர்பபன விவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இது மிக சிறந்த நிலைமையாகும்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை முன்வைக்க இரண்டு வார காலம் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை தனது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, அண்மையில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து சிறந்த புரிந்துணர்வை பெற்றுக்கொள்ள முடிந்தது.

விசேடமாக அந்த சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்பது மிகவும் முக்கியமானது.

இங்கிலாந்துக்கு விஜயம் செய்து, பிரதமர் டேவிட் கமரூனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றியளித்தன. பிரித்தானியாவின் மனதை வென்றதானது, முழு ஐரோப்பாவையும் வென்றதற்கு ஈடானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.