Header Ads



15 இலட்சம் பேரை திரட்ட ஐ.தே.க. தீர்மானம்

அரசியலமைப்பு மாற்று யோசனைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தாகவும்  100 நாள் வேலைத்திட்டத்தில்  70 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க. வின் வெற்றிக்கு  15 இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும்  15 ஆம்  திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறுமெனவும் குறிப்பிட்டார்.

கட்சிக்கான அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் முகமாக அதனை மாகாண சபை உறுப்பினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஐ.தே.க.  தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

கடந்த ஜனவரி   8 ஆம் திகதி நøபெற்ற தேர்தலில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு ஐ.தே.க. உட்பட இதர கட்சிகளும் பங்களிப்பை வழங்கினர்.  ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தோற்கடிக்கும் செயற்பாடு ஊவா மாகாண சபையில் ஆரம்பமானது.

அதாவது மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியுமென்பதை ஊவாலில் ஹரின் பெர்னாண்டோ காண்பித்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில்  5 இலட்சம் வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஐ.தே.க. பெரும் பங்காற்றியது.  இந்நிலையில் மக்களுக்கு வாக்குறுயளித்த 100 நாள் வேலைத்திட்டம் முடிந்ததும் ஏப்ரல்  23 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதாவது தேர்தலில் உறுதியளித்தவாறு  100 நாள் வேலைத்திட்டத்தில்  70, 80 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.  15 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி எரிபொருள் மற்றும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு கையளிப்பது, 17 ஆவது திருத்தத்தை மீள் கொண்டுவருவது செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கான யோசனைகள்  அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி பெரிய கட்சி.  தனியாக ஆட்சி செய்து மக்களுக்கு பல நன்மைகளை அளித்த கட்சி. இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில்  45 ஆகவுள்ள பிரதிநிதித்துவத்தை ஆட்சியமைக்கும் வகையில்  130 அல்லது 140  ஆக அதிகரித்து ஐ.தே.க.ஆட்சியை ஏற்படுத்த  வேண்டும்.

இந்த வெற்றிக்காக  15 இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும்  15 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும். ஊவா மாகாண சபைத் தேர்தலில் கிராமம் தோறும் 15, 20 உறுப்பினர்கள் இணைந்தனர்.  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் பிரசாரம் காரணமாக இந்த எண்ணிக்கை 50, 60 ஆக அதிகரித்தது. இவ்வாறான நிலையில் கட்சியின் வெற்றிக்காக மக்கள்  அவையை ஏற்படுத்த வேண்டும்.

சுதந்திரக்கட்சியினர்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கூறுவது போல் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து தேர்தலை ஏப்ரல்  23 க்குப் பின் நடத்த வேண்டும். இத் தேர்தலில் ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்த கட்சி அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றார்.

No comments

Powered by Blogger.