தமிழ் தேசிய கூட்டமைப்பில் சர்வாதிகார போக்கு - கண்டிக்கிறார் சிவசக்தி ஆனந்தன்
கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப்பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம்.
கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த 24.2.2015அன்று கொழும்பில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் த.தே.கூ தலைவர் சம்பந்தன் ஐயா கலந்துரையாடிய பின்னர் மூவரது பெயரை பரிந்துரைத்துள்ளார். அதற்குள் கிழக்கு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எமது கட்சியின் மூத்த பிரதிநிதியும் கிழக்கு மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரும் எமது கட்சியின் உபதலைவருமான இரா.துரைரட்ணம் உதாசீனம் செய்யப்பட்டதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வாறான புறக்கணிப்பை நாம் எதிர்பார்க்கவுமில்லை.
தன்னிச்சையான முடிவை நாம் ஏற்க முடியாது.
கிழக்கு மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் தலா ஒரு பிரதிநிதி அல்லது கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப்பெற்றவர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெற்றிருக்கலாம்
அதுவும் த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் அழைக்கப்படாமல் தனியே சம்பந்தன் ஐயா மாத்திரம் தன்னிச்சையாக முடிவை அறிவித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒடுக்குமுறைக்கு எதிராகவே தமிழ்ச் சமூகம் போராட்டத்தைச் சந்தித்து வந்துள்ளது. அந்த ஒடுக்குமுறை தமிழ் தலைமையின் மத்தியிலிருந்து வருமானால் அதுவும் எதிர்க்கப்பட வேண்டியதே.
உண்மையான ஐக்கியத்தையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நேசித்தே தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்துள்ளனர். அதனை சம்பந்தன் ஐயா அவர்கள் புரிந்துகொள்வார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். சர்வாதிகாரம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்க்கையே நல்ல உதாரணமாகும்.
துரைரட்ணம் மறுதலிக்கப்படமுடியாதவர்!
கிழக்கு மாகாணசபை வரலாற்றில் தொடர்ந்து 3 தடவைகள் அங்கம் வகித்தவருபவரும், கிழக்கில் அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்றவரும் சதா மக்களுடன் இணைந்து சேவையாற்றி மக்கள் நன்மதிப்பைப் பெற்றவருமான இரா துரைரட்ணம் கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நன்கு அறிமுகமானவரும் அவர்களின் அபிமானத்தைப் பெற்றவருமாவார் என்பதை நான்சொல்லித்தான் திரு.சம்பந்தன் ஐயா அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.
உண்மையில் அவர் ஒரு போராளியாகத்தான் கட்சியில் இணைந்தவர். இந்த அமைச்சுப்பதவியை சற்றும் எதிர்பார்க்காதவர். ஆனால் த.தே.கூட்டமைப்பிற்கு அமைச்சர் பதவிகள் என்று வருகின்றபோது கூட்டமைப்பின் வெற்றிக்கு அளப்பரிய பங்காற்றிய கட்சி என்ற அடிப்படையில் அதனைப் பெறுவதற்கு எமக்கும் தார்மீக உரிமையுண்டு என்பதை சம்பந்தன் ஐயாவால் மறுக்கமுடியாது.
இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாவதற்கும் அதனை நிலைபெறச் செய்வதற்கும் கிழக்கிலிருந்து ஈபிஆர்எல்எவ் கட்சிப்போராளிகள் பலர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்த நேரத்தில் துரைரட்ணம் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாகவே மட்டக்களப்பு மக்கள் அவரைத் தொடர்ந்தும் மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கினை வழங்கிவருகின்றனர். தற்போது ஒரு கூட்டு மந்திரிசபை என்று வரும்போது அவரைப் புறந்தள்ளி அமைச்சரவைத் தெரிவு இடம்பெறுவதனை எம்மால் ஏற்க முடியாதுள்ளது.
மறுபரிசீலனை வேண்டும்!
எனவே தெரிவை மறுபரிசீலனை செய்து கூட்டமைப்புத் தலைமைகள் இணைந்து சுமுகமான முறையில் பதவிகளை பகிர்ந்து வழங்கும் வகையில் நீதியான நியாயமான தீர்க்கமான தெரிவை மேற்கொள்ள வேண்டும். இதே தவறு வடக்குமாகாணசபையை அமைக்கும்போதும் இடம்பெற்றிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
மத்தியில் நல்லாட்சி தேசிய அரசாங்கம் என்ற கோஷங்கள் வலுப்பெறுகின்ற அதேவேளை, கிழக்கிலும் சர்வகட்சி அரசாங்கம் எனும் கருத்து மேலோங்கியுள்ளது. அந்தச் சிந்தனை கூட்டமைப்பிற்குள்ளும் உள்வாங்கப்பட்டு அங்கத்துவக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று எமது கட்சி பெரிதும் விரும்புகின்றது.
மக்களின் விருப்பு அபிலாசைகளுக்கு கட்சிகள் அதன் தலைமைகள் கட்டாயம் மதிப்பளிக்கவேண்டும். எனவே நியாயமான இறுதியான தெரிவை கட்சித்தலைமைகள் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
அமைச்சுக்கு ஆசைப்பட்டவர்களல்ல நாம்.
மாகாணசபை முறைமையை இலங்கை நாட்டிற்கு கொண்டுவர வித்திட்டவர்கள் நாங்கள். போராளிகளாக களமிறங்கியவர்கள் நாம். அமைச்சுப்பதவிக்கோ எம்.பி பதவிக்கோ ஆசைப்பட்டவர்களல்ல நாம். இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசை நிறுவுகின்றபோதே தேசிய அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள். எமது அன்றைய மாகாண சபையில் பல கட்சிகளையும் உள்ளடக்கிய சகல இனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் இருந்தார்கள். உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள் நாங்கள் யாருடைய உரிமையையும் தட்டிப்பறிப்பவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துக் காட்டினோம்.
தற்பொழுது த.தே.கூட்டமைப்பும் கிழக்கு மாகாணசபை அமைச்சரவையில் பங்கேற்பதற்கான முடிவை எடுத்துள்ள நிலையில், அமைச்சுப்பதவி என்று வரும்போது அதில் பங்கேற்க வேண்டியது எமது தார்மீக உரிமை. அதனை யாரும் மறுதலிக்க முடியாது. எனவேதான் கிழக்கில் சகல தகுதிகளுடனும் விளங்கும் எமது மூத்த உறுப்பினர், கட்சியின் உபதலைவர் துரைரட்ணத்தின் பெயரை எமது கட்சி சார்பில் நாம் ஏகமானதாகத் தெரிந்து எமது பரிந்துரையை இருவாரங்களுக்கு முன்னரே சம்பந்தன் ஐயா மற்றும் மாவை.சேனாதிராசா ஐயாவுக்கும் அனுப்பிவைத்திருந்தோம்.
கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை
கடந்த இரண்டு மாதகாலமாக த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டுமாறு சம்பந்தன் ஐயாவிடமும், மாவை.சேனாதிராசா ஐயாவிடமும் கோரிவருகிறோம். ஜெனீவாத்தீர்மானம், கூட்டமைப்பின் பதிவு இப்படி அத்தியாவசிய இன்னோரன்ன முக்கிய விடயங்களையிட்டு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4கட்சிகளும் கூடிப்பேசி ஆராயவேண்டியுள்ளது. ஆனால் இன்னமும் கூட்டம் கூட்டப்படுவதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை.
ஜனநாயகம் வெளிப்படைதன்மை தேவை!
த.தே.கூட்டமைப்பிற்குள் ஜனநாயம் வெளிப்படைத்தன்மை நிலவவேண்டும். தனிநபர் சர்வாதிகாரப் போக்கினால் இன்று மக்களாலும் ஊடகங்களாலும் த.தே.கூட்டமைப்பு தொடர்ந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. புலம்பெயர் சமுகமும் எமது மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தர் ஐயா இது போல பல தடவைகள் தன்னிச்சையாக முடிவெடுத்து ஏனையோரை ஓரங்கட்டியுள்ளார். 2012ஆம் ஆண்டு ஜெனிவா மனிதவுரிமைகள் மாநாட்டிற்குச் செல்வோம் என்று கூட்டமைப்பின் கூட்டத்தில் அறிவித்துவிட்டு இறுதியில் போகமாட்டோம் என்று சொன்னதிலிருந்து, யாழ்ப்பாணத்தில் மேதின வைபவத்தில் சிங்கக்கொடி ஏந்தியமை, கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதினத்தில் தமிழரின் மரபைமீறி பங்கேற்றமை போன்றவை பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் ஏனைய தலைமைகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக சர்வாதிகாரமாக முடிவெடுத்து செயற்பட்டமைக்கான சில உதாரணங்களாக அமைகின்றன.
எனவே தொடர்ந்து கொண்டிருக்கும் இச்சர்வாதிகாரப்போக்கானது எமது மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு விரோதமான நடவடிக்கை ஆகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்குகளை இனியும் தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment