Header Ads



கோதாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய தயங்கமாட்டோம் - பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன

ரத்னலங்கா மற்றும் அவன்காட் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யாரென்ற கேள்விக்கு அடுத்துவரும் வாரங்களில் பதில் வெளியாகும் அது தொடர்பான விசாரணை அறிக்கை மூலம் தெரியவரும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த விடயத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்யத் தயங்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். 

வடமாகாண பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு விஜயம்  மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பலாலி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்து நிகழ்வின் போது ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது; 

ரத்னலங்கா மற்றும் அவன்காட் ஆகிய பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்துவரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யார்? பாதுகாப்பு அமைச்சின்  கீழ் செயற்பட்ட ரத்னலங்கா நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த பணத்துக்கு என்ன நடந்தது? என்பன இதன்மூலம் தெரியவரும். இந்த விடயமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபயவை கைது செய்வீர்களா? எனக் கேட்டப் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்; ஆம் அவர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித பதவி'  தராதரத்தையும் பார்க்காது கைதுசெய்வோம் என்றார். 

1 comment:

Powered by Blogger.