புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில், மலேசியாவுடன் ஹக்கீம் கலந்துரையாடல்
மலேசியாவின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான உட்கட்டமைப்பு பற்றிய அமைச்சர் மட்ட விஷேட தூதுவர் டாட்டோ ஸ்ரீ எஸ். சாமிவேலு மற்றும் குழுவினர் இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி சைனுதீன் சகிதம், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்கிழமை (24) மாலை அவரது அமைச்சில் சந்தித்து நாட்டின் உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைப் பற்றி கலந்துரையாடினர். அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
மலேசியாவில், கோலாலம்பூரில் விஷேடமாக பயணிகள் நெரிசலை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு பரவலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மொனோ ரெயில் சேவையை ஒத்த போக்குவரத்து வசதியை (கொழும்பு மொனோ ரெயில்) ஸ்தாபிப்பதும் பிரஸ்தாப புரிந்துணர்வு உடன்படிக்கையில் அடங்கியுள்ள ஓர் அம்சமென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இன்னும் பல்வேறு முன்னேற்றகரமான அபிவிருத்தி முயற்சிகள் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பிரதியை அமைச்சர் ஹக்கீமிடம் டாட்டோ ஸ்ரீ எஸ். சாமிவேலு கையளித்து விளக்கமளித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பரிசீலனையுடனும், ஆலோசனையுடனும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான இறுதி முடிவு மேற்கொள்ளப்படுமெனத் தெரியவருகிறது.
Post a Comment