பாடசாலையில் குழந்தைகளிடையே மோதல் - பலியாகிய குழந்தை
(India)
மலரினும் மென்மையான குழந்தைகளின் மனதில் கூட வன்முறை துளிர்விட்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியிருக்கிறது பீகாரில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம்.
கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் ராம்பூர் டோலாவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் அமர பெஞ்ச், டெஸ்க் என்று உட்கார எந்த வசதியும் கிடையாது. வெறும் சாக்குப்பை மட்டுமே. அதுவும் குறைந்த அளவிலே இருப்பதால் அதில் உட்காருவதற்கு சின்னஞ்சிறு குழந்தைகள் போட்டுபோடுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று முன்தினம் இதுபோல் சாக்குப்பையில் அமர்வதற்காக நடந்த சண்டையின் போது 1-ம் வகுப்பு படிக்கும் சீதாவை சக குழந்தைகள் 2 பேர் அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதனால் அழுது கொண்டே இருந்த சீதா பள்ளி முடிந்தவுடன் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் தன் அக்காவிடம் இந்த சம்பவத்தை சொல்லியபடியே வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது, ஏற்கனவே தாக்கிய 2 மாணவிகளும், சகோதரிகளை இடைமறித்து சாலையில் வைத்து வெறித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த அந்த இருவரின் தாய்மார்களும் தன் மகள் போடும் சண்டையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். இந்த வெறிச்செயலால் மயக்கமடைந்த சகோதரிகள் இருவரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய அக்காவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் தாக்கிய மாணவிகள், அவர்களின் தாய்மார்கள், மற்றும் சம்பவத்தின் போது வகுப்பறையில் இருந்தும் குழந்தைகளுக்கிடையே நடந்த சண்டையை கண்டுகொள்ளாத ஆசிரியர் என ஐந்து பேருக்கு எதிராக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Post a Comment