Header Ads



காத்தான்குடி இஸ்லாமிய அருங்காட்சியகத்தில், உருவச் சிலைகள் தொடர்பில் சர்ச்சை


 -Mohamed Fahath-

காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய அருங்காட்சியகத்தில(நூதனசாலை) உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும் அவரின் நிதியொதுக்கீட்டிலும் இந்த இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியகம் நிர்மானிக்கப்பட்டு அதன் நிர்மான வேலைகள் முடிவடையும் நிலையிலுள்ளன.

இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் இந்த இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று தொன்மையை வெளிப்படுத்தும் முஸ்லம்களின் பாரம்பரிய வரலாறுகளைக் கொண்ட பல் வேறு பொருட்கள் மற்றும் கலாசார சின்னங்கள் என்பன வைக்கப்பட்டுள்ளன.

இதில் இலங்கையில் சிங்கள மன்னர்களின் சபைகளில் முஸ்லிம்கள் மந்திரிகளாக இருந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலும், மற்றும் முதன் முதலில் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தரை ஞாபகப்படுத்தும் வகையிலும் அவர்களின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையினால் ஆராயும் பத்வாக் குழு கூட்டம் 21.02.2015 ஆந் திகதிகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தலைமையில் ஜம் இய்யா அலுவலகத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் இணைந்து அருங்காட்சியகத்தைநிறுவிவரும் முன்னாள் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கலந்துரையாடுவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் இது தொடர்பான மார்க்கத்தீர்ப்பு பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.

எனினும் இந்த அருங்காட்சியகத்தில் உருவச்சிலைவைக்கப்பட்டுள்ளமை ஹறாமான (கூடாத) விடயமாகும் என காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மார்க்கத் தீர்ப்பை எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. இந்த மார்க்கத்தீர்ப்பை காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இஸ்லாமியப் பார்வையில் குர்ஆன், மற்றும் ஹதீஸ், அடிப்படையிலும், இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் இமாம்களின் கூற்றுக்களில் இருந்தும் இவ்வாறான உருவச்சிலைகள் வைப்பது அதை நிறுவுவது, அதை பராமரிப்பது ஹறாம் என இஸ்லாமிய மார்க்கத்தீர்ப்புக்கள் உள்ளதாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் அன்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு பேரின வாத கடும் போக்கு சக்திகளினால் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் முஸ்லிம்களின் தொன்மை தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கேள்விகளுக்கு காத்தான்குடியில்
நிர்மானிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட அருங்காட்சியகம் பதில் வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

நன்றி- மிப்றாஹ் முஸ்தபா.

No comments

Powered by Blogger.