புத்தளத்தில் தலையிடிக்கு, தலையணையை மாற்றிப் பயனில்லை..!
-Muhusi Rahmathulla-
புத்தளம் மாவட்டத்தில்1989 முதல் 2010 வரை இடம் பெற்ற ஆறு பொதுத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபி, M.H.M. நவவி, K.A. பாயிஸ், S.A. யஹ்யா T.M.இஸ்மாயில், A.M. கமர்தீன் முதலானோர் இவ்வாறு போட்டியிட்டனர்.
தமது வெற்றியை தக்க வைத்துக்கொள்ள சகலவித பகீரதப் பிரயத்தனங்களையும் அவர்களும் செய்தனர். முஸ்லிம் காங்கிரஸ் கூட ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக இருந்த மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபியை போட்டியிட விடாது முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக இருந்த K.A. பாயிசை மாத்திரம் போட்டியிடச் செய்து பார்த்தது.
இந்த வேட்பாளர்களில் 1994 இல் சந்திரிகா ஆட்சிக்கு வந்த போது ஆட்சி மாற்ற அலையில் சிங்கள மக்கள் ஆதரவு கிடைத்தும் M.H.M. நவவி 32000 இற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றும் வெற்றி பெற முடியாமல் போனது.
M.I. பிஷ்ருல் ஹாபி 34000 இற்கும் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றிப் படியில் ஏறி இறங்கினார் என்று நாம் பேசிக் கொள்கிறோம்.
K.A.பாயிஸ் 34000 விருப்பு வாக்குகளைப் பெறும் வெற்றி வாகை சூட முடியாமல் போனது. அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்களால் வெற்றி பெற முடியாமல் போன வரலாற்றை நாம் எளிதில் மறக்க முடியாது. பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவியை அலங்கரித்த ஒரே காரணத்துக்காக தேசிய பட்டியலில் பாயிசுக்கு அக்கட்சி இடம் வழங்கியது.
தற்போது எதிர் நோக்கியுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தவர்களுமாக மூன்று வேட்பாளர்களும் போட்டியிடும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இத்தேர்தலில் முகம்கள் மாத்திரமே மாற்றப்பட போகின்றன. இது தலையிடிக்கு தலையனையை மாற்றுவதற்கு ஒப்பானது மாத்திரமே.
பிரதான கட்சிகளின் அமைப்பாளர்களுக்கு தேவைபடுவது புத்தளம் தொகுதியல் தமது கட்சியை வெற்றி பெற்றதாக தலைமைத்துவத்துக்கு அறிவித்து புள்ளி (Marks) எடுப்பது மாத்திரமே. முஸ்லிம் கட்சிகளுக்குத் தேவைப்படுவது தமது வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளைக் காண்பித்து தமது கட்சிக்கும் செல்வாக்கு இருப்பதாகக் காண்பிப்பதாகும்.
தோல்வியடைந்தாலும் தேசியப்பட்டியல் என்று ஒரு மாயை காண்பிக்கப்படுகிறது. இது இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமமாகும். முஸ்லிம் கட்சிளும் தலைமைகளும், வேட்பாளர்களும் தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு சதாவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பாராளுமன்றத் தேர்தல்களில் நமது பிரதிநிதித்துவம் எட்டாக் கனியாகிப் போயுள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தல்களில் கூட பிரதானக் கட்சிகளில் நமது வேட்பாளர்களின் வெற்றி விலகிச் செல்வதும் நமது அண்மைக்கால அரசியல் செல் நெறியாகி உள்ளது.
எனவே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை விடுத்து நிரூபணமான உண்மைகளை புரிதல் அவசியம். கட்சிகளும், வேட்பாளர்களும் எதுவும் செய்து விட்டுப் போகட்டும் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் நமது மக்கள் மாற்றத்துக்கு அல்லாஹ்வின் அருளால் தயரானார்களோ அதை விடவும் தீராத வேட்கையுடனும், தணியாத தாகத்துடனும் இந்தத் தேர்தலில் நமக்கான M.P என்ற கோஷத்தில் புதியதொரு வழிமுறைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
போட்டியின்றித் தெரிவான சுதந்திர இலங்கையின் முதல் M.Pயை (Marhoom Alhaj H.S. Ismail M.P and 1st Muslim Speaker) வழங்கிய என்ற கீர்த்திக்கு உரிமையாளர்களான புத்தளம் மக்கள் மீண்டுமொரு முறை வரலாறு படைக்க முன்வருவதே முதல் தர பணியாகும்.
"ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாமல், அல்லாஹ்வும் அந்த சமூகத்தை மாற்றியமைக்கப் போவதில்லை" என்ற அல்குர்ஆணின் கருத்தை நாம் மீட்டிப் பார்ப்போம்.
Post a Comment