Header Ads



குடுவில் கிராம சகோதரிகளின், அவசர கோரிக்கை (படம் இணைப்பு)


-மு.இ.உமர் அலி-

குடுவில்  கிராமம்  இறக்காமம்  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒரு   தொன்மையான விவசாயக் கிராமமாகும், இங்கு கிட்டத்தட்ட  197  குடும்பங்கள் வாழ்கின்றன, ஒரு பள்ளிவாசலும், ஒரு ஆரம்பப்பாடசாலையும் இங்குள்ளது.

வில்லுக்குளத்தை  எல்லையாகக்கொண்ட  இக்கிராமத்தில்  நெற்பயிர்செய்கை, சிறு மரக்கறிகள் பயிரிடலுடன்  நன்னீர்  மீன்பிடியும் பிரதானமான   தொழிலாகும், இங்கு வாழ்கின்றவர்களுள் தொண்ணூறு வீதத்திற்கும்  அதிகமானவர்கள்  நாளாந்தம்  கூலிவேலைக்குச்சென்று  குடும்பம் நடாத்துகின்ற கூலித்தொழிலாளிகள்.

குடிநீர்  பொதுப்போக்குவரத்து  என்பன இவர்களது  பிரதானமான பிரச்சினைகளாக இருக்கின்றன. அரசினால் நீர்வளங்கள் வேலைகள்  ஆரம்பிக்கப்பட்டிருப்பினும்  இன்னும் அவை முற்றுப்பெறவில்லை, அத்துடன் அந்தத்திட்டத்தினுள்  குடுவில்  பிரதேசத்தின்  சகல பிரதேசங்களும்   உள்வாங்கப்பட்டதாகவும்   தெரியவில்லை.

இங்குள்ளவர்கள், வாய்க்கால்கள்,மற்றும் சில பொதுக்கிணறுகளிலேயே  குளித்தல், துணிதுவைத்தல் போன்ற  அன்றாட தேவைகளை நிறைவு செய்கின்றனர்.

பெண்கள் தீகவாபி, சம்மாந்துறை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளுக்கு  அண்மையில்  உள்ள பொதுக்கிணறுகளில் குளிக்கும்போது, வீதியால்  செல்வோருக்கு  தெரியாமல் இருப்பதற்கு  தமது பிடவைகளால்  மறைப்பு  ஏற்படுத்திய  பின்னரே  குளிக்கின்றார்கள்.

அநேகமான  பெண்கள்  இருள் கவிழ்ந்த  பின்னர்  அல்லது  இருள் பிரிந்து விடியும் முன்னரே  குளிக்கச்செல்கின்றார்கள். இதனால்  பாம்பு பூச்சிகளின்  கடிக்கு உள்ளாக வேண்டிய ஆபத்தும் உள்ளது.

இறக்காமம்  பிரதேச சபை, குடுவில் கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன  இந்தப் பொதுக் கிணறுகளிற்கு  ஒரு  மறைப்புச்சுவர்  அமைத்துக்கொடுக்க  இதுவரை நடவடிக்கை  எடுப்பதாக   தெரியவில்லை.

குறிப்பிட்ட பிரதேச சபை  இந்தக்கிணறுகளுக்கான மறைப்புச் சுவரினை  அமைத்துக்கொடுக்க முன்வரவேண்டும்  என இக்கிராமத்து பெண்கள்  வேண்டிக்கொள்கின்றனர்.


No comments

Powered by Blogger.