சிரியாவில் புகுந்து, துருக்கி மேற்கொண்ட அதிரடி - சுலைமான் ஷாவை அடக்கம்செய்த பெட்டகம் மீட்பு
சிரியா எல்லைப் பகுதிக்குள் சுலைமான் ஷா நினைவிடத்தில் சிக்கிய வீரர்களை மீட்ட பின்பு துருக்கி திரும்பும் ராணுவத்தினர். |
சிரியா எல்லைப்பகுதிக்குள் இருக்கும் சுலைமான் ஷா நினைவிடத்தில் சிக்கிய துருக்கி ராணுவ வீரர்களை அதிரடியாக மீட்டது துருக்கி ராணுவம்.
ஆட்டோமன் சாம்ராஜ்யத்தை நிறுவிய உஸ்மான் மன்னரின் பாட்டனார் சுலைமான் ஷாவின் நினைவிடம், தற்கால சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் உள்ளது. இது துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என சர்வதேச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அங்கு துருக்கி தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அந்த நினைவிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவ்விடத்தையொட்டி அமைந்துள்ள கோபானே பகுதியானது, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், நினைவிடப் பாதுகாப்பில் ஈடுபட்ட துருக்கி வீரர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர்.
அமெரிக்கக் கூட்டுப் படையினர் உதவியுடன் குர்து படையினர் கோபானே நகரை மீட்டபோதிலும், துருக்கி வீரர்கள் நினைவிடத்தில் தொடர்ந்து இருந்து வந்தனர்.
இந்நிலையில், துருக்கி அந்த இடத்தில் சனிக்கிழமை இரவு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டு, தனது பாதுகாப்பு வீரர்களை மீட்டதோடு, சுலைமான் ஷாவை அடக்கம் செய்த பெட்டகத்தையும் துருக்கிக்கு எடுத்துச் சென்றது. அந்த நினைவிடக் கட்டடம் தகர்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் சுமார் 600 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நூறு பீரங்கிகள், மற்றும் கவச வாகனங்கள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. நடவடிக்கையின்போது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க கூட்டுப்படையினருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதாக துருக்கி தெரிவித்தது.
Post a Comment