முஸ்லிம் காங்கிரஸுடன், சீனா குழுவினர் சந்திப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ கியூ ஹுவா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை நண்பகல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், இலங்கை காணி மீளமைப்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சமகால விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் குறித்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ கியூ ஹுவா, அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேட்டறிந்து கொண்டார்.
சீனாவில் நீண்ட காலமாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்ற கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தங்களுக்கிடையில் உறவைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியையும் அம்மாகாணத்தில் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நாட்டுடன் நற்புறவை பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் இதன்போது கேட்டுக் கொண்டார்.
அதேவேளை கல்முனை மாநகர சபை உட்பட கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றின் ஊடாக பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் சீனா உதவ வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அமைச்சர் ரவூப் ஹக்கீமும் வலியுறுத்தியதன் பேரில் இக்கோரிக்கை சீன நாட்டு பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் அதற்காக தமது நாட்டிலுள்ள முக்கிய சில உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்ததுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.
குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை மாநகர சபைக்கு சீனாவின் முக்கிய பிராந்திய அரசின் பொருளாதார ஒத்துழைப்பை பெற்றுத் தருவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment