முதலமைச்சரும், படிப்பினை பெற வேண்டிய முஸ்லிம் அரசியலும்..!
நண்பன் ஒருவனை புரிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்ய வேண்டும். அதுபோல் உண்மையான போராளிகள் யாரென்று அடையாளம் காண முஸ்லிம் காங்கிரஸிடம் அதிகாரத்தை கொடுத்துப்பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் பலத்த எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள இந்நிலையில் பல படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அதில் ஒன்றுதான் தேசிய காங்கிரஸ் போராளிகளிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலர் படிப்பினை பெற வேண்டியுள்ளது. முதலாவது இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் வாய்ப்பு இருந்த போதிலும் அவ்வாய்ப்பு பிள்ளையானுக்கு தேசிய காங்கிரஸின் தயவுடன் வழங்கப்பட்டது. அது அதீத விமர்சனத்துக்கு உட்பட்ட போதிலும் இன்றைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் அதன் தாக்கம் கனதி குறைந்தே காணப்பட்டது.
இன்று முதலமைச்சர் நியமனம் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியதும் முஸ்லிம் அரசியலின் சுயரூபம் வெளிப்படத் துவங்கி உள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் குறிப்பிடலாம். ஒன்று ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் கடந்த கால முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகள். முஸ்லிம் காங்கிரஸில் அவரது இணைவு கட்சியின் தவிசாளர் பசீர் அவர்களையே ஆட்டம் காணச் செய்துள்ளது. அதன் பிரதிபலிப்பே அவரது அண்மைக்கால அரசியல் தடுமாற்றங்கள்.
இரண்டாவது முஸ்லிம் மக்களிடையே காணப்படும் பிரதேசவாத சிந்தனை. இக் குறுகிய நிலப்பரப்பு அரசியல் சிந்தனையே முஸ்லிம் அரசியலின் புற்று நோயாகும்.
முதல் காரணத்தை நோக்கும் இடத்து ஹாபிஸ் நஸிர் அரசியலில் மன்னிக்கப்பட முடியாத, விதி விலக்கான மனிதர் என்று அர்த்தம் கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரசுடனான இணைவின் போது அவர் அவரது கட்சியை இழந்து, பல ஆவண ரீதியான விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளார். துரோகங்கள் நிறைந்த அரசியலில் இதுவே தூய அரசியலுக்கு தம்மை தயார்படுத்தலுக்கான ஆதாரங்களாகும். இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடு தம்மை நெருக்கமான விசுவாசிகள் என்று காட்டிகொள்ளும் பலர் போடும் துரோக நாடகங்கள் பலர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
இரண்டாவது காரணத்தை நோக்கும் போது முஸ்லிம் அரசியலின் மூலதளம் பிரதேசவாதத்திலே கட்டப்பட்டுள்ளது. இந்த சிந்தனை எமது சமூகத்தை அழித்து விடும். அதன் ஆரம்பமே தற்போது இடம்பெற்று வரும் வேண்டத்தகாத நிகழ்வுகளாகும்.
ஊருக்கு ஒரு முதலமைச்சர் வழங்கினாலும் பிரதேசவாத சிந்தனை குறைந்த போகாது என்ற நிலை இருக்கஇ தமது ஊர் புறக்கணிக்கப்படுகின்றது என்ற ஆதங்கத்துக்கு கட்சியின் தலைமைத்துவம் சரியான மாற்றீடுகளை வழங்க முன்வர வேண்டும். ஏனெனில் இச்சிந்தனையே பலர் தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் உபாயமாக பயன்படுத்துகின்றனர். அதனை மக்கள் சக்தி என்று வேற வரைவிலக்கணப்படுத்துவர்.
தற்போது இடம்பெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னால் முஸ்லிம் அரசியலின் துரோகிகள் குளிர் காயலாம். இது விடயத்தில் கட்சி தலைமைத்துவம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து முஸ்லிம் அரசியலலை பின் நோக்கி நகர்வதிலிருந்து தடுக்க நிறுத்தவேண்டும்.
போராளிகள் என்போர் தலைவர் வரும் போது மாலை போட்டு, கோஷம் போடுபவர்கள் என்ற சிந்தனை மாற வேண்டும். இந்த சமூகத்தின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அனைவருமே போராளிகள்தான்.
தலைவரின் தீர்மானத்தில் திருப்தி காணாத போராளிகள் அது தொடர்பாக நியாயங்களை கேட்டறிந்து கொள்ளும் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கருத்தியல் ரீதியாக பிரச்சினைகளை அணுகி தீர்வுகளை அடைய மக்களை அரசியலில் பயிற்றுவிப்பதில் விட்ட தவறே இவற்றுக்கான காரணங்களாகும். அதை விடுத்துஇ உருவ பொம்மை எரிப்பு நிகழ்வுகள் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இவற்றின் ஊடாக அடைந்து கொள்ளும் அடைவுதான் என்ன? இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி சில உதிரிக் கட்சிகள் களத்தில் இறங்கி உள்ளதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலர் இந்நேரம் அவர்களுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டு இருப்பர்.
முஸ்லிம் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். அந்த சந்தர்பத்தை சரிவர பயன்படுத்துமா முஸ்லிம் காங்கிரஸ் என்பதுவே எமது எதிர்பார்ப்பு.
அபூ யும்னா
மத்திய ஆட்சி இனவாதமற்ற அரசியலில் பயணிப்பது உறுத்திபடுதப்படும் வரை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இப்படியான குழப்பங்களுடன் பயணித்துக்கொண்டே இருக்கும். சுயநலமற்ற தகுதியுடையவர்கள் உள்வாங்கப்படும் போது குறைந்த குழப்பத்துடன் பயணிக்கும்.
ReplyDelete