முன்னைய அரசிலிருந்து வெளியேற, சிறிநீரக நோய் தொடர்பான பிரச்சினையே மூலகாரணம் - ராஜித
தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உடனே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலிருந்த நாம் முன்னைய அரசிலிருந்து வெளியேற சிறிநீரக நோய் தொடர்பான பிரச்சினையே மூலகாரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறுநீரக நோய்களுக்கு உதவியளிக்கும் முகமாக ஜனாதிபதியால் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நிதி ஆதாரம் உதவியோருக்கு கௌரவமளிக்கும் முகமாக நேற்று காலி முகத்திடல் ஹோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசின் அமைச்சரவையில் சிறுநீரக நோய் தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் சமர்ப்பித்த போதும் அப்போதைய அரசு அதற்கு இடமளிக்கவில்லை.
அதேபோன்று இந்த சிறுநீரக நோய்க்கு மூலகாரணமாக கருதப்படும் தரமற்ற இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் முறையிட்டபோது அவர் அதனை கண்டுகொள்ளவில்லை. அப்போது சர்வாதிகாரமிக்க குடும்ப ஆட்சியே நிலவியது.
இதுபோன்ற தேசிய ஔடத சட்டமூலத்திற்கு புகைத்தல் உருவ எச்சரிக்கையும் நடந்தது. இந்நிலையில் மார்ச் மாதம் 4ஆம் திகதி தேசிய ஔடத சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உடனடியாக அதனை நிறைவேற்றுவோம். சேனக பிபிலே எனது குருவாவார். அவரது கொள்கையே ஔடத சட்டமூலமாகும் என்றார்.
Post a Comment