Header Ads



கால்களை இரண்டு இடங்களில், வைத்துக்கொண்டு செயற்பட வேண்டாம் - ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

கட்சியை பிளவுபடுத்துவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடுமையாகச் சாடியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடுமெனவும் எச்சரித்திருக்கிறார்.

நுகேகொட கூட்டத்திற்குச் சென்றவர்கள் தொடர்பாக கடும் தொனியில் சாடியிருக்கும் ஜனாதிபதி, எங்கே இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்களே  தீர்மானித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் மாலை சுதந்திரக்கட்சி உயர்மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசு தொடர்பாக கலந்துரையாடும் சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், சுதந்திரக்கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25 உம், பிரதியமைச்சுக்கள் 25 உம் ஒதுக்கப்பட வேண்டுமென கட்சியில் பலரும் யோசனை முன்வைத்துள்ளனர்.

தற்போது அரசில் கூடுதல் பெரும்பான்மை சுதந்திரக் கட்சிக்கே இருப்பதால் அக்கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட  வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினூடாக இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதனை  2016 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தவில்லை.

பொதுத் தேர்தலை நடத்த ஏப்ரலில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு உருவாகலாம் என ஐ.தே.க. நம்புகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகள் தனித்துச் செல்லும் போது சுதந்திரக்கட்சி பலவீனப்படுமெனவும்  ஐக்கிய தேசியக்கட்சி கூடுதல் ஆசனங்களை கைப்பற்றக்கூடியதாக இருக்குமெனவும் நம்பப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் சிலர் சதி செய்து வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

நுகேகொட கூட்டத்துக்குச் சென்றவர்களின் நோக்கம் தமக்கு நன்கு தெரியுமெனவும் , உள்ளே இருந்து குழிபறிக்கும் வேலைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி இங்கு கடும் தொனியில் பேசியுள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் உள்ளிருந்து செயற்பட முனைந்தால் தாமே முடிவெடுக்கும் நிலை ஏற்படலாமெனவும் ஜனாதிபதி இக்கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.

கட்சியின் தலைவராக நானே இருக்கின்றேன். முடிவெடுக்கும் அதிகாரம் தம்மிடமே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி கட்சிக்குள் வேறு யாரும் முடிவெடுக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் சுட்டிக்காட்டியதோடு கட்சியில் சிலரது  செயற்பாடுகள் தொடர்பாக  தொடர்ந்து அவதானித்துவருவதாகவும் அடுத்து வரும் நாட்களில்  திடீர் முடிவுகளை எடுக்கும் நிலைமை ஏற்படலாமெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்திருக்கிறார்.

1 comment:

  1. மைத்திரியா கொக்கா..?

    சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா, மகிந்த ராஜபக்ஷ என்று எத்தனையோ சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் அத்தனை ஆண்டுகள் கூடவே இருந்த அனுபவம் வீணாவதில்லையே..

    ReplyDelete

Powered by Blogger.