ஆஸ்திரேலியாவில் 'வன விலங்கு ஹோட்டல்'
வண்ணமயமான சுவர்களையும், பார்த்துப் பழகிப்போன சர்வரின் முகங்களையும் கண்டு சலிப்படைந்த மக்களுக்கு சிங்கங்களின் முன்னே உணவு உண்டு, கரடியின் முன்னர் நீராடி, ஒட்டகச் சிவிங்கியுடன் உறவாடும் அரிய வாய்ப்பினை வழங்கும் ’திரில் ஓட்டல்’ ஆஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெரா பகுதியில் தேசிய வன விலங்கு சரணாலயம் மற்றும் மீன் காட்சி அரங்கம் அமைந்துள்ளது. பச்சைப் பசேல் என்ற இயற்கை எழில் சூழ்ந்த ஏகாந்த அமைதியுடன் திகழும் இப்பகுதியை பார்வையிட வரும் சுற்றுலா பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த வளாகத்தினுள் ’ஜமாலா வைல்ட் லைஃப் லாட்ஜ்’ என்ற பெயரில் ஒரு புதிய ஓட்டல் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டலில் தங்குபவர்கள் தங்களது அறைகளை வன விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். கரடிகள் வேடிக்கை பார்க்க உல்லாச குளியல் போடலாம். சிங்கங்கள் சப்பு கொட்ட உங்களுக்கு பிரியமான இறைச்சி வகைகளை வெளுத்துக் கட்டலாம். வாடிக்கையாளர்களுக்கும், விலங்களுக்கும் இடையில் சில மில்லிமீட்டர் கனமுள்ள கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். கண்ணாடிகள் இல்லாத பால்கனிகளில் நின்றபடி ஒட்டகச் சிவிங்கிகளுடன் கை குலுக்கலாம்.
52 ஆயிரம் கேலன் தண்ணீர் நிரப்பட்ட ராட்சத தொட்டிகளுக்குள் ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய சுறா மீன்கள் ஆனந்த தாண்டவம் ஆடும் அழகினை அள்ளிப் பருகலாம். அந்த தொட்டியின் மேற்புரத்தில் கண்ணாடி தொட்டிக்குள் உள்ள மீன்களை பிடித்து தின்பதற்காக அலைபாயும் குரங்கு கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
வனம் சூழ்ந்த பகுதியில் உள்ள பெரிய ஏரியில் படகு சவாரி செய்து குதூகலிக்கலாம். அப்படியே, அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆப்பிரிக்க சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் போன்றவற்றையும் பார்வையிடலாம்.
இத்தனைக்கும் சேர்த்து ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து தங்கும் மற்றும் உணவு கட்டணமாக நாளொன்றுக்கு 400 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 24 ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்பட்டாலும் இந்த தொகை முழுவதும் இந்த வன விலங்கு காப்பகத்தை பராமரிக்கவும், இங்குள்ள விலங்குகளுக்கு உணவு அளிக்கவும், இனப்பெருக்க செலவினங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Post a Comment