சிலிங்கோவில் பண வைப்புச் செய்தவர்களின் முழுபணத்தினையும் மீள வழங்குவேன் - லலித் கொத்தலாவல
(UL)
வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களுடைய முழுப் பணத்தினையும் மீள வழங்குவேன் என, அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான லலித் கொத்தலாவல, நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் உறுதியளித்தார்.
கடந்த காலத்தில் தனது கரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், தற்போது அவ்வாறான நிலையிலிருந்து, தான் விடுபட்டுள்ளதாகவும் - இதன்போது, லலித் கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனம் தொடர்பான வழங்கொன்றில் பிரதிவாதியாக, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜராகிய நிலையில், நீதவானின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, லலித் கொத்தலாவல மேற்கண்டவாறு கூறினார்.
வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளையில் பண வைப்புச் செய்தவர்களில் ஐந்து பேர் இணைந்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கொன்றில் - லலித் கொத்தலாவல பிரதிவாதியாக ஆஜரானார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில், இந்த வழங்கு நேற்று புதன்கிழமையன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது, லலித் கொத்தலாவல தனது சட்டத்தரணிகளுடன்; நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மேற்படி வழங்குத் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, லலித் கொத்தலாவலவுக்கு பல தடவை நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தும், அவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. எனவே, லலித் கொத்தலாவலவுக்கு எதிராக, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் தொடர்பான - இந்த வழக்கில் முதல் தடவையாக லலித் கொத்தலாவல நேற்ற – நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் வைப்புச் செய்த தமது பணத்தினை, குறித்த நிறுவனம் மோசடி செய்து விட்டதாகவும், அந்த நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்டுள்ள தமது பணத்தினை மீளப் பெற்றுத் தருமாறு கோரியும், அந்த நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளையில் வைப்புச் செய்தவர்களில் 05 பேர் இணைந்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழங்கில் - லலித் கொத்தலாவல உட்பட நான்கு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளில் லலித் கொத்தலாவல மட்டுமே – நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது, 'சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களில் அதிகமானவர்கள் ஏழை விவசாயிகள். அவர்களுக்கு நீங்க என்ன கூற விரும்புகிறீர்கள்' என, லலித் கொத்தலாவயிடம் - திறந்த மன்றில் நீதிபதி வினவினார்.
இதற்கு பதிலளித்த லலித் கொத்தலாவல 'கடந்த காலங்களில் எனது கரங்கள் கட்டப்பட்டிருந்தன. இப்போது, அவ்வாறான நிலையிலிருந்து விடுபட்டுள்ளேன். சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்கள் அனைவரின் பணத்தினையும் நான் மீளளிப்பேன். அதற்குரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன்' என்றார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமையன்று - அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான - வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் லலித் கொத்தலாவல, ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழங்கில், முறைபாட்டாளர்கள் சார்பில் - சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் நீதிமன்றில் ஆஜராகி வாதிட்டார்.
Post a Comment