Header Ads



'கிழக்கு மாகாண முதலமைச்சர்' முரண்பாட்டு அரசியலின் இனவாத அடையாளம்

-நவாஸ் சௌபி-

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தொடர்வது சம்மந்தமாக இதுவரை இருந்துவந்த முதலமைச்சர் சர்ச்சை முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒருமுடிவுக்கு வந்திருக்கிறது. கிழக்கில் ஒரு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு தலைமைத்துவ சவால் ஒரு தடையாக இருப்பதாகக் கருதி ரவூப் ஹக்கீம் அதனை வழங்காதிருக்கின்றார் என்ற விமர்சனம் மிகவும் பலமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் அதனை முற்றாக மறுப்பதாகவும் அக்கருததை அடியோடு அழிப்பதாகவும் இன்று முதலமைச்சர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட்டிருப்பது முதலில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயம். அது யாருக்கு வழங்கப்படுகிறது என்பது உள்வீட்டுப் பிரச்சினை அது இரண்டாம் பட்சமானது. முதன்மையானது முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சைப் பெற்றுக்கொண்டதுதான். அது கட்சிரீதியாக நாம் வெற்றிகண்ட பெரும் சவாலாகவும் இருக்கிறது.  

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் முதலமைச்சரைப் பெற்றுக்கொண்டமை கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தை மாத்திரமல்லாமல் தேசிய ரீதியாக உள்ள முஸ்லிம்களின் பெறுமானத்தையும் உயர்த்திக் காட்டியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு போதிய சாத்தியங்களோடும் நியாயங்களோடுமுள்ள ஒரேஒரு மாகாணம் கிழக்கு மாகாணம்தான். அந்தவகையில் அது 2012 இல் நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் நஜீப் ஏ மஜீத் அவர்களை முதலமைச்சராக அமர்த்தியதன் ஊடாக ஆரம்பமாகி இருந்தது. ஆனாலும் வடக்கிலிருந்து பிரிந்து கிழக்கிற்கு 10.05.2008 இல் தனியாக நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் அமையப்பெற்ற முதலவாது ஆட்சியில் கிழக்கின் முதலாவது முதலமைச்சர் என்ற வரலாற்றுப்பதிவோடு சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடமை ஏற்றார். 

இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக சி.சந்திரகாந்தன் நியமிக்கப்பட்ட போது அவரை தமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் அதை ஒரு இனவாதமான அரசியலாக்காமல் அக்காலகட்டத்தில் காணப்பட்ட தேசிய அரசியல் நலன்களையும் கருத்தில் எடுத்து அதற்கும் பங்களிப்புச் செய்கின்ற நோக்கில் பிள்ளையானின் கீழ் அவரின் இனம், மதம், கட்சி எதுவும் பாராமல் கிழக்கில் நல்லுறவு மலரவேண்டும் என்ற அடிப்படையில் கிழக்கு முஸ்லிம்கள் அவ்வாட்சியின் பங்காளிகளாக இருந்தார்கள். இப்படி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2012 இல் நஜீப் ஏ மஜீத் முதலமைச்சரான போதும் கிழக்கின் தமிழ் சமூகங்கள் அதனை ஒரு இனவாதமான அரசியலாக பெரிய அளவில் தூக்கிப்பிடித்து அதற்கான விமர்சனைங்களை அடையாளம் பெறும் வகையில் செய்யவில்லை.

இதன்படி கடந்தகாலங்களில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையானும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீதும் முதலமைச்சர்களாக இருந்ததில் கிழக்கில் இவ்விரு சமூகங்களைச் சேர்ந்த யாரும் முதலமைச்சர்களாக வருவதில் இனவாத அடையாள அரசியல் விமர்சனங்கள் முரண்படுகின்ற அளவில் இருக்கவில்லை. இதன்மூலம் கிழக்கில் தமிழரோ முஸ்லிமோ முதலமைச்சராக வருவதற்கான அடிப்படை ஒன்றும் உருவாகி இருந்தமையும் அதனை இவ்விரு சமூகங்களும் சரிகாணும் நியாயங்களும் அரசியல் ரீதியாகவும் சமூக  ரீதியாகவும் புரிந்துகொள்ளப்பட்டமையும்  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி வெளிப்படையாக இருந்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்க ஒரு உடன்பாட்டுடன் என்று பேச்சுக்களை ஆரம்பித்தார்களோ அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பது முரண்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் இனவாத அடையாளம் பூதாகரமாக வெளிப்படும் ஆபத்து நிகழத்தொடங்கிவிட்டது.

குறிப்பாக தேசிய அரசியல் என்றாலும் மாகாண அரசியல் என்றாலும் இவ்விரு கட்சிகளும் ஒரு விடயத்தில் தொடர்புபடுகின்ற போது அங்கு இக்கட்சிகளை முந்திக்கொண்டு இனவாதம் மேலோங்கிவிடுகிறது எனும் வழக்கமான அரசியல் பிரச்சாரங்களை உருவாக்கிவிடுகிறது. இரண்டும் சமூக அடையாளங்களைக்கொண்ட அரசியல் கட்சிகள் என்பதனால் இக்கட்சிகளின் செயல்கள் அச்சமூகங்கள் சார்ந்த இனவாதமாகவே இறுதியில் விளைவு பெறுகிறது. இதனால்தான் இலங்கையில் உள்ள அதிகாரத் தீர்வுகுறித்த முடிவுகளை எடுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இச் சமூகக் கட்சிகள் ஒருபோதும் ஒன்றுபட்டு நிற்க முடியாது என்பது தெளிவாக தெரிந்த உண்மை. இதனை கடந்தகாலங்களில் பல அரசியல் அனுபவங்கள் எமக்கு உணர்த்தி இருந்தாலும் அண்மைக்காலமாக முஸ்லிம்காங்கிரஸின் தலைமையும் அதன் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது குறித்தும் அவர்களோடு கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பது குறித்தும் மிகுந்த நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டுவந்தார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டதுபோல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் முதல் அதன் அரசியல் பிரமுவர்கள் பலரும் முஸ்லிம் காங்கிரஸை மிகவும் காட்டமாக விமர்சித்துவருகின்றார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து அரசியல் செய்ய முடியும் எனக் கருதுகின்றவர்களுக்கு இது போதுமான பாடமாகவே இருக்கும் என்பதை இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்விரு கட்சிகளும் இவ்விரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாக இருந்தாலும் இவையே சமூகங்களைத் துண்டாடுகின்ற அரசியல் உபாயங்களையும் முன்னெடுக்கின்றனவா? என்றும் உள்ளார்ந்து நோக்க வேண்டியும் இருக்கின்றன.  உண்மையில் 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் உருவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்கு பங்காளிகளாக ஆனதில் உருவான பேரம் பேசுதலில் முதலமைச்சர் கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸிடம் இருந்த போதும் அதனை அது பிந்திய இரண்டரை வருடங்களுக்குமாக ஏற்றுக்கொள்வதை உடன்படிக்கை அளவில் எழுதி வைத்திருந்தமை யாவரும் அறிந்த உண்மை. அதன்படி குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அது அக்கட்சிக்கு இயல்பாக கிடைத்திருக்க வேண்டிய ஒன்று.

இடையில் ஜனாதிபதித் தேர்தல் வந்ததில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தில் கிழக்குமாகாண சபையில் இரண்டாவது ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆட்சி அமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதுவிடயத்தில் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே இருந்த உடன்படிக்கையும் இதில்  மாற்றம் கண்டது.  ஆனாலும் இப்பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட முந்திய காலம் முடிவடையும் நிலையில் பிந்திய காலத்திற்கான முதலமைச்சர் நியமனத்தை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு அமையும் ஆட்சிக்கு தாங்கள் பூரண ஆதரவு வழங்குவது என்றும் தெரிவித்திருந்தார். இதுபோன்று கடந்த ஆட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்நிரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய அமைச்சர்களும் இக்கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

இந்த சமிஞ்ஞையை வைத்துக்கெண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆரம்பித்த தங்களது பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்ளாமல், தாங்களுக்கு முதலமைச்சைத் தரமுடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக அழுத்தமாக முதலாவது பேச்சில் கூறியும் அதனைப் பொருட்படுத்தாது மேலும் இரண்டு சந்திப்புக்களை அக்கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்ததில் உள்ள அரசியல் தேவையும் நம்பிக்கையும் என்ன என்ற கேள்வி எழுகிறது?

இதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனை ஒரு இனவாதமான பிரச்சாரமாக முன்மொழியத் தொடங்கியதோடு. காரசாரமாக ரவூப் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸையும் விமர்சித்தனர். ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடங்கிய பேச்சினை பின்னர் தேசிய அரசியல் முடிவுகள் மாறிய நிலையிலும் முன்னெடுத்தமை ஒரு இனவாதமான முதலமைச்சரை உருவாக்கிய தோற்றத்தை அளித்திருக்கிறது. முதலமைச்சர் விடயத்தை முஸ்லிம்காங்கிரஸ் கையாண்ட விதம்  தமிழ் மக்களுக்கு நியாயமாக வரவேண்டி இருந்த முதலமைச்சரை முஸ்லிம்கள் தட்டிப் பறித்துவிட்டார்கள் என்றவிதமான பிரச்சாரங்களை உருவாக்கி இருக்கின்றது. எதுவித சத்தமுமில்லாமல் பெறவேண்டிய முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சுப் பதவியை பெருத்த இனவாதக் கோஷங்களோடும் சவால்களோடும் பெறும் நிலையை உருவாக்கிய பெரும் தவறை இதில் ஹக்கீம் செய்திருக்கிறார். என்பதே நாம் ஆராய வேண்டிய விடயமாகும். இது விடயத்தில் ஹக்கீம் செய்த தவறும் இதுவே ஆகும்.  மாறாக அதை யாருக்கு கொடுத்தார் என்பது அவர் மீது சுமத்தும் குற்றமல்ல. 

ஏனெனில் கிழக்கு மாகாண ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்ற உத்தரவாதமும் அதற்கான உறுதியான நிலைப்பாடும் இல்லாத நிலையில் அக்கட்சி அதனை உருவாக்க எடுத்த எத்தனத்தில் முஸ்லிம் காங்கிஸும் அவசரப்பட்டு இணைந்து கொண்டதுதான் முஸ்லிம் காங்கிரஸ் செய்த மாபெரும் தவறு என்பதே இங்குள்ள வாதம். ஏனென்றால் அரசாங்கம் தங்களுக்கு ஆட்சி அமைக்க முடியாதுள்ளது அதானல் நீங்கள் கூட்டுச் சேருகின்றவர்களுடன் சேர்ந்து ஆட்சியை அமையுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆளுனர் ஊடாக தெரிவிக்கவும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என்று அறிவிக்கவும் இல்லை. என்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எப்படி உருவானது. அப்படி உருவானதாக அவர்கள் பேசிக்கொள்வது ஒரு மாயைதான். அரசாங்கம் கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் இறுதி முடிவினை உறுதியாக வெளிப்படுத்தாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்தால் ஆகக் கூடிய நண்மைகளைப் பெறலாம் என்று அதற்காக ஒரு முன்னெடுப்பை செய்துவிட்டு இறுதியில் அது மைகூடாமல் போனமைக்கு காரணம் முஸ்லிம் காங்கிரஸ்தான்  என்ற பழியை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுமத்துகின்றனர். இதற்கு ஏதுவாக முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளும் இருந்தமை அத்தகைய விமர்சனங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸை ஆளாக்கியும் இருக்கிறது. 

இதுஇவ்வாறு இருக்க கிழக்கு மாகாண முதலமைச்சரை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து முஸ்லிம்கள் தட்டிப் பறித்தார்கள் என்று கூறுகின்ற போது அவ்வாறு ஆட்சி அமைக்க உருவான சந்தர்ப்பம் யாரால் எப்படி உருவானது என்பததை முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதாரப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாது இல்லாத ஒரு அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் பறித்துக்கொண்டது என்று ஆத்திரப்படுவது ஆரோக்கியமான சமூக அரசியலுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

No comments

Powered by Blogger.