''முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையில், ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஓட்டை''
நாட்டின் ஒருபகுதியில் முஸ்லிம் சமூகத்தின் உள் வீட்டுப் பிரச்சினை பூதாகரமாகியிருக்கும் இந்தச் சூழலில் நாம் மாற்று சமூகத்தாரிடம் இருந்து எவ்வாறு நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும்? இலங்கையில் இனவாதத்தையும் விட கொடிய அரக்கன் பிரதேச வாதமாகும்.
அது தமிழ்,சிங்கள சமூகத்தைக் காட்டிலும் முஸ்லிம் சமூகத்திடம் எங்குமே மலிந்து காணப்படுகிறது. அன்புள்ள எனது ஈமானிய உறவுகளே, முதலில் நாம் உட்சுவரை மெழுக வேண்டும். பின்னர்தான் வெளிச்சுவரை மெழுக வேண்டும். அரசியலில் நாம் இப்படி பதவிகளுக்காகவும்,சுய லாபங்களுக்காகவும் எமக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொள்வது பிற சமூகத்தில் எம்மை கேலிக்குள்ளாக்கும் ஆரோக்கியமற்ற செயற்பாடாகும்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விடயத்தில் இப்போது நடந்து முடிந்திருக்கும் விரும்பத்தகாத செயல்கள் நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஓட்டையாகும். பதவிகள் எப்போதும் நிரந்தரமல்ல,எமது பண்புகளே எப்போதும் எமக்கான அளவீடாகும். ஒரு அரசியல் தலைவன் மக்களின் பிரதிநிதியாகிறார். அவரை வைத்தே முழு சமூகத்தையும் பிற இனத்து மக்கள் அடையாளம் காண்பார்கள்.
கிழக்கில் மாமனிதர் அஷ்ரப் அவர்கள் வளர்த்த ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் மருவி, இப்போது உணர்ச்சி அரசியல் மேலோங்கிக் காணப்படுகிறது. இது குறித்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன். இந்த நிலை இனியாவது மாற வேண்டும்.
மக்களின் நலனை முன்னிறுத்தாமல் பதவிகளுக்கு மாத்திரம் சோரம் போகும் இந்த அரசியல் சக்திகளால் எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் பெரும்பான்மை மக்களிடத்தில் நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்துமென்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சமூக நலன்,அபிவிருத்தி,மேம்பாடு,உள்ளக ஒருமைப்பாடு,பல்லின சமூகத்தில் முஸ்லிம்களுக்கான நேர்த்தியான சகவாழ்வு என்பன எப்போதும் பேணப்பட வேண்டும். அதுவே எமது அசைக்க முடியாத கொள்கையாகும்.
கடந்த அரசிலும் முஸ்லிம்கள் என்றால் குழப்பக்காரர்கள், சந்தர்ப்பவாதிகள், சுய நலவாதிகள் என்ற இழிவான பெயர்களை எமது அரசியல்வாதிகளே, ஒன்றுமறியாத அப்பாவி சமூகத்திற்கு பெற்றுத் தந்தனர். இந்த அரசிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயிருக்கும் மூடத்தனமான அரசியல் செயற்பாடுகளை கை விட்டு, ஒட்டு மொத்த சமூகத்திற்கு நாட்டிலும் சர்வதேசங்களிலும் நற்பெயரை பெற்றுத் தர இனியாவது முன்வர வேண்டுமென தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.
ஆஹா.. ஓதும் வேதம் காதுகளுக்கு இனிமையாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது வருவது என்னவோ சாத்தானின் வாயிலிருந்து.. அதுதான் கவனம்.
ReplyDelete