Header Ads



ரவூப் ஹக்கீமுடன் இணக்க அரசியலையே விரும்புகிறேன் - ரிஷாத் பதியுதீன்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- 

அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரிஷாத் பதியுதீனுடன் எனது தொலைபேசி உரையாடல்

நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா?

ரிஷாத் பதியுதீன்:- ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலவராக செயற்பட்டார். அதன் பின்னர் இரண்டரை வருடங்கள் திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதல்வராக இருந்தார். இப்போது எனக்கு தருவதாக கூறிய எமது தலைவர் என்னை ஏமாற்றி விட்டார். எனவே. அம்பாறையைச் சேர்ந்த ஒருரே இனி வரவேண்டும். அதற்காக எனக்கு ஆதரவு வழங்க முடியுமா என கேட்டார். அதற்கு நான், எங்களுக்குப் பிரச்சினை இல்லை. முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றேன். ஆதரவு வழங்குவதாகவும் கூறினேன். அத்துடன் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தான் இணக்க அரசியலையே விரும்புவதாகவும் அவரிடம் கூறினேன். இது தவிர ஜெமீலை எனது கட்சியில் சேருமாறு நான் கேட்கவோ அல்லது ஜெமீல் எமது கட்சியில் இணையப் போவதாக கூறவில்லை.

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உங்களிடம் அனுமதி பெற்றா ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக நியமிப்பதற்கு இணக்க கையொப்பமிட்டார்? மேலும் நீங்கள் அவரது கையொப்பத்தை வாபஸ் செய்யும்படி கூறினீர்களா?

ரிஷாத் பதியுதீன்:- கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தலைவர் என்னிடம் அவர் அனுமதி கேட்டிருக்க வேண்டும். கட்சியின் தலைமையுடன் கலந்தரையாடியே கையொப்பமிட்டிருக்கவும் வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீமிடம் ஐந்துக்கு மேற்பட்ட முறைகள் நான் கூறியிருந்தேன. அத்துடன் இது தொடர்பில் எமது கட்சியுடனும் பேசுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு ஹக்கீம் அனைத்துக்கும் பேசுவோம்.. பேசுவோம் என்று கூறினாரே தவிர எம்முடன் கலந்துரையாடவில்லை. மாறாக எமது கட்சியைச் சேர்ந்த சிப்லி பாறூக்கிடம் இரகசியமாக கையொப்பத்தை பெற்றுக் கொண்டனர்.

நேற்று முன்தினம் அமீர் அலியின் அமைச்சுக்கு நான் சென்றிருந்த போது சிப்லி பாறூக் காணப்பட்டார்.. அப்போது கையொப்பமிட்ட விவகாரம் தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பினேன். கட்சியின் அனுமதி இல்லாமல் எவ்வாறு கையொப்பமிட்டீர்கள் என்று நான் கெட்டதுடன் கடிதத்தை வாபஸ் பெறுமாறும் அவரைக் கூறினேன். இரு கட்சி தலைமைகளும் பேசி நாங்கள் முடிவெடுப்போம். முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும் அவரிடம் தெளிவாக கூறினேன்.

ஆனால் அவர் அதற்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அவரது தொலைபேசியையும் செலிழக்கச் செய்திருந்தார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையப் போவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வாறு அவர் இணைந்து கொண்டால் கட்சியின் யாப்பையும் கட்சித் தலைமையையும் மீறிய குற்றச்சாட்டில் அவரை பதவி விலக்குவோம்.

நான்:- நீங்கள் கிழக்கு மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பீர்களா?

ரிஷாத் பதியுதீன் :- இது தொடர்பில் கட்சி கூடியே முடிவெடுக்கும்.கட்சியின் முடிவை மீறி யாரும் நடந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

நான்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்தே கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டுமென நீங்கள் கூறினீர்களா?

ரிஷாத் பதியுதீன்:- ஆம். இதில் தவறில்லை. நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்காளியாக சேர்த்துக் கொள்ளவே வேண்டும். இதுவே சாலச் சிறந்தது. இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீமும் சம்பந்தன் ஐயாவும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். 30 வீதமான சிறுபான்மையின மக்கள் வாக்களித்தே இந்த ஜனாதிபதியை வெற்றி பெற வைத்தோம். அதேவேளை முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வடக்கிலும் கிழக்கிலும் இல்லாமல் இல்லை என்பதனையும் நான் மறுக்கவில்லை. 30 வருட போரில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்றுள்ள சமாதான மற்றும் நல்லாட்சி களநிலையில் கிழக்கில் ஆட்சியமைக்கும் விடயத்தில் நாங்கள் பிரிந்து நின்று பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு

நான்:- உங்களது கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்க முயற்சிக்கிறதா?

ரிஷாத் பதியுதீன்:- அவ்வாறு அவர்கள் தங்கள் கட்சிக்குள் எமது உறுப்பினர்களை உள்வாங்கிளால் இணைபவர்கள் மீது சட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம். ஆனால், அவர்களது கட்சி பலவீனமடைந்ததன் காரணமாகவே எங்களது உறுப்பினர்களை உள்வாங்குகிறார்கள் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், முஸ்லிம் கங்கிரஸ் உறுப்பினர்களோ அல்லது பிற கட்சி உறுப்பினர்களோ எமது கட்சியில் சேர்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சியின் உறுப்புரிமையுடன் வந்தால் நாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம். நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன்.

(இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி அவர்களின் கருத்திகையும் பெற்று பதிவிடுவேன்)

No comments

Powered by Blogger.