புதுடில்லி மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது, நல்லாட்சிக்கான தேசிய முன்னனி
டில்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை ஆம் ஆத்மி கட்சி பெற்று வரலாறு படைத்துள்ளது. 95 வீத ஆசனங்களுடன் அமோக வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் டில்லி மக்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி (NFGG) தனது முழு நிறைவான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
ந.தே.மு. (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேர்மையான, நல்லாட்சிப் பண்பு கொண்ட ஆம் ஆத்மியின் அரசியல் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்வதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி பெருமகிழ்ச்சி அடைகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் போக்கில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகள் செல்வாக்குச் செலுத்தி வரும் இந்திய அரசியல் அரங்கில், சாதாரண பொதுமக்களின் கட்சியான ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கைக்குரிய மூன்றாவது அணியாகவும் மாற்று சக்தியாகவும் மேலெழுந்திருக்கிறது.
அண்மையில் பாரிய மக்கள் ஆதரவைப் பெற்ற மோடி அலைக்கு, வெறும் மூன்று ஆசனங்களை மட்டுமே வழங்கி டில்லி மக்கள் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர். பொறுப்புணர்ச்சியற்ற ஆட்சியை நடத்திய காங்கிரஸ் அரசியலை பூச்சியமாக்கி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இது ஆம் ஆத்மியின் கட்சியின் வெற்றியல்ல, மாற்றத்தை விரும்பும் மக்களின் வெற்றி எனவும், அகங்காரம் கொள்ளாமல் அமைதியாக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தைக் கொண்டாடுமாறும் அக்கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களை வேண்டியுள்ளனர்.
இப்போது ஆம் ஆத்மி கட்சியினருக்கு தங்களது மக்கள் சார்பு கொள்கைளை நடைமுறைப்படுத்தும் சவால் உருவாகியுள்ளது. அதனை சிறந்த முறையில் ஆம் ஆத்மி முன்னெடுக்கும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நம்புகிறது.
அனைவரும் ஒன்றுதிரண்டால் மக்களை ஏமாற்றும் வங்குரோத்து அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறையை நிறுவலாம் என்பதை டில்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.
மாற்றத்தை சாத்தியப்படுத்துவதற்கு ஒவ்வொரு வாக்காளரும் மனதளவில் தயாராகுவதும், அதற்காக அர்ப்பணிப்புடன் உழைப்பதும் இன்றியமையாதது என்பதையே இத்தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆம் ஆத்மி கட்சி திடீரெனத் தோன்றிய அரசியல் கட்சி அல்ல. ஊழல் எதிர்ப்பு இயக்கமாகவும் மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், நேர்மையான மக்கள் மைய அரசியலுக்காகவும், அதன் முன்னோடிகள் நீண்ட காலமாக சிவில் சமூகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
ஆனால், அரசியல்வாதிகள் இந்த கட்டமைப்பு முறை மாற்றத்திற்கு தயாராகாமல், மலிவான மாமூல் அரசியலில் செயலிழந்து உறைந்து போனதால் அதிருப்தியடைந்த அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான சிவில் சமூகப் போராளிகள் அரசியல் பேராட்டத்தில் களமிறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அரசியல் போராட்டம், தவிர்க்கமுடியாத காலத்தின் தேவையாக மாறியதை அவர்கள் உணர்ந்ததன் பிரதிபலிப்பே ஆம் ஆத்மி கட்சியாகும். சமூக மாற்றத்திக்கான போராட்டம், அரசியல் மாற்றமாக வளர்த்தெடுக்கபட்டால் மட்டுமே தீர்க்கமானதும், பயனுறுதி வாய்ததுமான மாற்றத்தை ஏற்படுத்தலாமென அவர்கள் உறுதியாக நம்பினர். அதற்கு மக்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்த சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்கும் மாற்று சக்திகளை, சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளும் மத்தியதர வர்க்கத்தினரும் சிறுபான்மையினரும் பெண்களும் இளைஞர்களும் ஒடுக்கப்பட்டோரும் புத்திஜீவிகளும் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆம் ஆத்மி கட்சியை அதற்கு நல்லதொரு தீர்வாகவும் தெரிவாகவும், மக்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நன்கு புலப்படுத்துகின்றன.
ஊழல், மோசடிகள், குறுகிய இனவாதம், மதவாதம் போன்றவற்றில் மூழ்கிப் போயுள்ள, வெளிப்படைத் தன்மையற்ற, சமூகப் பொறுப்புணர்ச்சியற்ற போலி அரசியல் வியாபாரிகளின் முகமூடியைக் கிழிக்கும் வகையில், வாக்கு எனும் ஜனநாயக ஆயுதத்தை துணிந்து பயன்படுத்திய டில்லி மக்கள் முழு இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.
இலங்கை மக்களாகிய நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளோம். இத்தேர்தலில் டில்லி மக்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, நல்லாட்சியை நிலைநிறுத்தும் பண்புகள் கொண்ட, புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பும் ஆற்றலுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளை மனமுவந்து ஆதரிக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அழைப்பு விடுக்கிறது.
People take time to switch from traditional and mainly capitalist politics to progressive non-traditional politics. In Srilanka JVP is heading in that direction.
ReplyDeleteIn recent elections Muslims largely voted for JVP for its stance against the attack of
Muslims by Buddhist extremists.This is a big achievement by the JVP and also
by the Muslims.