Header Ads



புதிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு, எங்களுக்கு வசந்த காலம் ஏற்பட்டிருக்கிறது - ரவூப் ஹக்கீம்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடந்த மக்கள் புரட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் என்று அரசியல் விமர்சகர்களால் பல கோணங்களிலும் அந்த புரட்சிக்கு வழிகோலிய கட்சியாக எங்களது கட்சியையும் இணைத்துப் பேசுகின்ற நிலைமை உருவாகியிருக்கிறது. 

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முல்லைத்தீவில்  நடைபெற்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்பொது தெரிவித்தார். அவரது நீண்ட உரையின் ஒரு பகுதி வருமாறு-

புதிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு எங்களுக்கு வசந்த காலம் ஏற்பட்டிருக்கின்றது. கரைதுரைப்பற்று பிரதேசம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல அனர்த்தங்களை அனுபவித்திருக்கின்றது. சிறிய எண்ணிக்கையில் இங்கு வாழ்ந்த, வாழும் முஸ்லிம்களில் கணிசமான எண்ணிக்கையினர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் உரிய காலத்தில் பதியப்பட்டிருந்தால் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான உறுப்பினர்களை 28ஆம் திகதி நடக்க போகும் தேர்தலில் பெற்றுக் கொள்ளலாம்.

இடம் பெயர்ந்த வாக்காளர்களைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையாளர் சட்டத்திலுள்ள விதிமுறைகளை ஒரு நெகிழ்வுத் தன்மையோடு பார்க்காததால் கரைத்துரைப்பற்று முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இந்த பிரதேச சபையில் உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இழந்திருப்பது துரதிர்ஷ்டமானது.

நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. புதியதோர் அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படத்த வேண்டுமென்ற கருத்து இப்பொழுது பரவலாக அடிபடுகின்றது. எதிர்க்கட்சி இல்லாத அரசியல் என்று எங்களது மறைந்த தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் கனிந்திருக்கின்றது. 

தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒரு விட்டுக் கொடுப்போடு நடந்து கொள்ளும் வேண்டுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றி நாங்கள் பேசி வந்திருக்கின்றோம். 

இந்த நாட்டின் அரசியலில் இது காலம் இருந்து வந்த நெருக்கடி நிலையில் இருந்து நீங்கி ஒரு பதிய யுகத்தில் அடியெடுத்து வைப்பதற்கான நிலைமை இப்பொழுது தோன்றியிருக்கின்றது.

முஸ்லிம்களை இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒர் அங்கமாகவும், பரிமாணமாகவும் பார்ப்பதில் இன்னமும் கோளாறு இருந்து வருகின்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களின் அரசியலில் நாங்கள் தனித்துவம் பேணிய காரணத்தினால் தான் எங்களது பிரச்சினைகள் ஏனைய தரப்பினரை எட்டுவதற்கும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் காரணமாகியது. 

கடந்த அரசாங்கத்தின் போது நாங்கள் தனித்துப் போட்டியிடுவதற்கு முன்வந்த போதெல்லாம் எங்கள் மீது கடினப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் நாங்கள் எங்களது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கு பின்வாங்கவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில் வெறும் சாட்டுக்காக அமைச்சராக இருக்க வேண்டிய நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தள்ளப்பட்டது. அந்த அரசாங்கத்தில் விருப்பமில்லாத நிலைமையில் தலைமை இருந்து வந்ததை கட்சியின் போராளிகளும் புரிந்து கொண்டிருந்தார்கள். 

இப்பொழுது நிலைமை முற்றாக மாறியிருக்கின்றது. அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அமைச்சுப் பொறுப்புகள் தலைமைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எமது இராஜாங்க அமைச்சருக்கும். பிரதியமைச்சருக்கும் கூட மிகவும் பயனுள்ள அமைச்சுப் பொறுப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றினூடாக நாட்டிற்கும் சமூகத்திற்கும் பல விதமான நன்மைகள் ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. 

இவ்வாறான சூழ்நிலையில் கரைத்துறைப்பற்று வாக்காளர்கள் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் எங்களது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமாக பின்தங்கிய இப்பிரதேசத்தில் எங்களது பிரதிநிதித்துவம் ஊடாக அபிவிருத்திகளை அடைய முடியும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான யூ.எல்.எம்.முபீன், வேட்பாளர்கள் உட்பட பல உரையாற்றினர்.

3 comments:

  1. புழுதி அடங்கட்டும்

    ReplyDelete
  2. Shaaaaaa.nice dress.colombo area different dress.eastern province different dress.good leader sofar.nice acting yaaaaaa

    ReplyDelete
  3. ஓமோம் தலைவா் சாரன் கடை திறக்க பாறாராக்கும் இது சாறன் விளம்பர கூட்டமாக்கும் பிழைக்க தெரிந்த தலை♪♪♪♪♪

    ReplyDelete

Powered by Blogger.