Header Ads



ரவூப் ஹக்கீம் உரிய பதில் வழங்காமலிருப்பது ஏன்..?

-அபூ யும்னா-

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது தொடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் தலைமை உரிய பதில் அளித்ததாக தெரியவில்லை.

இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அம்பாறை மாவட்டத்தை புறக்கணித்தது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒரு பிரதி அமைச்சு திருகோணமலை மாவட்டத்துக்கும் ராஜாங்க அமைச்சு அம்பாறை மாவட்டத்துக்கும் மற்றைய ஒரு அமைச்சு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது என்று அங்குள்ள மக்கள் யாரும் விமர்சித்ததாக அறியவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மிகவும் சவாலுக்கு உட்பட்ட பலவீனமான மாவட்டம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீரலி போன்றோரின் இருப்புக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதென்பது  இலகுவான காரியமல்ல. இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அங்கு கொண்டுள்ளது. அங்குள்ள வாக்குகள் அம்பாறை மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவானாலும் அம்மக்களின் பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை குறைத்து மதிப்பிட முடியாது. 

இந்த அடிப்படையில் மத்திய அரசாங்கத்தில் எந்தவித அதிகாரமும் வழங்கப்படாத மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டமை, அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக் கின்றது என்று  அர்த்தமாகாது. இம்முறை முஸ்லிம் காங்கிரசுக்கு மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபையில் கிடைத்த அதிகாரங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதுவே யதார்த்தமாகும்.

அதே போன்று கிழக்கு மாகாண சபையில் 19 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஸ்தீரணமான ஆட்சி ஒன்றை ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளது. அமைச்சர் ரிசாத்தின் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் கிழக்கில் தமது கட்சியை வளர்க்க ஐக்கிய தேசிய கட்சியின் தயா கமகேக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுக்க முயன்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அனைத்து கட்சிகளினது ஆதரவை பெற்ற பொருத்தமானதாக நபராக ஹாபிஸ் நஸீர் அஹ்மத் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் கண்டு இருக்க முடியும். இந்தவகையில் கூட முதலமைச்சர் நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு இருப்பின் அது பற்றிய நியாயங்களை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மக்களுக்குத் தெளிவுபடுத் வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏழு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முதலமைச்சர் வழங்கப்படுவதற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் கல்முனை தொகுதி குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசம் முதலமைச்சர் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டதாக வாதிடுவது அம்மக்களை மீண்டும் மீண்டும் அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கும். 
கடந்த காலத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் நியமித்த நிஜாமுத்தின் அக்கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராக செயற்பட்டதை பிரதேசவாதமாக கருத முடியாதோ அதே போல்தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனமும் பிரதேசவாதமாக கருத முடியாது என்பதை நடு நிலையாளர்கள் புரிந்த கொள்வார்கள்.

முன்னால் கல்முனை மாநகர முதல்வர் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் விடுத்து சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேசசபை உருவாக்கி தருவோம் என்று தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற வைத்த நிலைமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அது போன்ற நிலைமை மீண்டும் வராத வண்ணம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். கருத்து ரீதியாக இந்த விடையத்தை அணுகி மாற்றீடுகளை பெற முயற்சிக்க வேண்டும்.

உணர்சிகளுக்கு அடிமையாகி அவசர தீர்மானங்களை எடுத்து வங்குரோத்து அரசியல்வாதிகளின் பெயர்ப் பட்டியலில் தற்போதைய சாய்ந்தமருது மாகாண சபை உறுப்பினரின் பெயரும் இணையாமல் இருக்க மக்கள் சார்பாக வேண்டுகிறோம். அதுவே எமது பிராத்தனையும்.

3 comments:

  1. திரு.ஹபீஸ் நசீர் என்ற ஒரு தனிப்பட்ட நபருக்காகவே இந்த அமைச்சு பதவி விலை போயுள்ளது. அபு யும்னா கூறியவாறு மாவட்டங்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட வில்லை. இவர் ஒரு மொத்த வியாபாரி. தலைவர் அஷ்ரப் அவர்களை நம்பவைத்து அவரது மறைவுக்கு பின்னால் மா பெரும் தொழில் அதிபராக மாறியவர். அரசியல் என்பது ஒரு கடுகளவும் தெளிவு (அறிவு) அற்றவர். இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுத்தவர். இது தான் இவரது அரசியல் தெளிவு. முஸ்லிம்களின் தன்மானம், முஸ்லிம்களின் உரிமை எதனையும் கருத்தில் கொள்ளாது தனது வியாபர நண்பர்களாக ராஜபக்ச அன் கோ இருந்த ஒரே காரணத்துக்காக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த உரிமைகளுக்கும் சாவுமணி அடிக்க நினைத்த ஒரு பொறுப்பற்ற சுயநல மிக்க மனிதர்.... பணம்..பணம்...பணம்... அவ்வளவுதான். இவருக்கு முன்னுரிமை கொடுக்கும் தலைமையை ( விலை போயிருக்குமோ??) நாம் சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. இவர் பணத்தால் கட்சியையும் அதன் நோக்கத்தையும் ( கட்சி உறுப்பினர்களை வாங்குவதன் மூலம் ) துவம்சம் செய்து விடுவார் என்ற கண்ணோட்டம் எங்களுக்கு உள்ளது அவ்வளவு தான்.

    ReplyDelete
  2. Please jaffnamuslim don't support and write about some Acting politicians ok and hakeem Don mistake he always insulting and hating ampara peoples also we know about hafees naseer I don't know how much you get money for this article if you think truly you can't write like this please don't do...

    Eastern politics finished with Ashraff( really we are missing)

    ReplyDelete
  3. கட்டுரையாளரின் கருத்து ஓரளவேனும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

    பிரதேசவாதம் என்பது குறுகிய சிந்தனைதான் என்றாலும் சமநிலையில் சகலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வந்தால் மட்டுமே அந்தச் சிந்தனையே எழாமல் ஒழிக்கலாம்.

    அது ஒருபுறமிருக்க, இரண்டு விடயங்களைச் சொல்ல வேண்டும்:

    1. தனிப்பட்ட குறைபாடுகள் இல்லாதவர்களுக்குத்தான் மு.கா.வில் பதவி கொடுப்பது என்றால் யாருமே பெறமுடியாத நிலைதான் ஏற்படும். ('பாவமே புரியாதவர்கள் முதல் கல்லை எடுத்து எறியுங்கள்' எனும் இயேசு கதை தெரியும்தானே?)

    2. மு.கா. தலைவர், வாக்கியங்களுக்கிடையே முற்றுப்புள்ளிகளுக்குப் பதிலாக காற்புள்ளிகள் போட்டபடி விளக்கம் கூறப்போனாரானால், அதைப் புரிந்து கொள்வதற்குள் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதைவிட கூறாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.