Header Ads



அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள மைத்திரியும், ரணிலும் இணக்கம்...??

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது தீவிரமாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் பிரதமரின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி எப்போதும் செயற்படுவது தொடர்பாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆயினும் ஜனாதிபதிக்கு பிரதமர் வழங்கிய ஆலோசைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரை ஜனாதிபதி கோருவதற்கு இயலுமானதாகவும் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கேட்கக்கூடியதாகவும் ஏற்பாடுகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் பிரதான நோக்கத்துடன் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தும் சட்டமூலம் அடுத்தமாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றமும் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை ஒன்றையொன்று மேவிச் செல்லாமல் சமநிலையை பேணுவதற்கான செயற்பாட்டுத்திறனுடனான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாக அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிரணியின் பொதுவேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாரியளவில் ஜனநாயகரீதியான  சீர்திருத்தங்களை மேற்கொள்வதென உறுதியளித்திருந்தார்.

அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் கொண்டிருந்த எதேச்சாதிகாரமான அதிகாரங்களை நீக்கிவிடும் அம்சங்களை அவரின் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளினால் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் பற்றி தற்போது கலந்துரையாடப்படுகிறது.

இக்கலந்துரையாடல்களின் போது பல்வேறு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படுகின்றதென வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.