கிழக்கு மாகாண சபையை, குழப்ப நினைப்பது..!
(சத்தார் எம் ஜாவித்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்கள் அந்தவகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகங்கள் இணைந்து ஆட்சி நடத்துவதே காலத்தின் தேவையாகும்.
அவ்வாறு மாகாண சபையை குழப்பி அதனைச் செயயிழக்க வைத்தால் அதனால் பாதிக்கப்படப்போவது கிழக்கு மக்களேயாகும். அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் உடையவர்களாக காணப்படும் வேலையில் அதனை குழப்ப நினைப்பது அர்த்தமற்ற செயற்பாடுகளாகவே உள்ளது.
இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவி பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ள போதிலும் மழை விட்டாலும் தூவானம் குறைவதில்லை என்பதற்கு ஒப்பாக தற்போது அதைப்பற்றி ஒருசில ஊடங்களில் தொடராக விமர்சனங்கள் செய்யப்படுகின்றமை அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும் என புத்தி ஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தவகையில் பாரிய சவால் மிக்க ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது. காரணம் பலகட்சிகளின் அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் இட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியில் தளம்பல் நிலை ஏற்படுமானால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
வடக்கில் ஒரு தமிழர் இருக்கும்போது கிழக்கில் ஒரு முஸ்லிம் இருப்பதில் என் தவறு? என புத்தி ஜீவிகள் கேட்கின்றனர். கிழக்குமாகாணம் தமிழ் பேசும் மக்களின் மாகாணம் என்ற வகையில் தமிழ் பேசும் ஒரு குடிமகன் என்பதில் சாதி சமயம் காட்டுவது தற்போதைய நிலையில் ஆக்கபூர்வமான விடயங்கள் அல்லவென கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் இன்னும் இருக்கும் இரண்டரை வருடகாலத்தில் கிழக்கு மாகாண சபையை தற்போதிருக்கும் முதலமைச்சருடன் ஒன்றினைந்து மக்களுக்குச் சேவை செய்ய உறுப்பினர்கள் முயல வேண்டும் அதற்காக நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் இன்று கிழக்கு மாகாண சபைக்குள் இன்று பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அதனால் கிழக்கு மாகாண ஆட்சி தொங்கிக் கொண்டிருப்பதாக ஒரு சில இன வாதிகளாலும், முதலமைச்சர் ஒருவர் முஸ்லிமாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக அதனை விரும்பாத மற்றொருசாரார் தற்போது தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிலும் முக்கியமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முறுகள் நிலைகள் தோன்றியிருப்பதாகவும் இருப்தாகவும் தெரிவிக்கப்படுவதையிட்டு ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நேரடியாக கேட்கப்பட்டபோது அவர் தெரிவித்த கருத்து வியக்க வைத்துள்ளது. அதாவது அவர் சொன்ன வார்த்தை தமக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் எந்தவித கருத்து முறண்பாடுகளோ அல்லது பேரம்பேசும் விடயங்களோ இல்லையென்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைப் பொருத்தவரை நாங்கள் புரிந்துணர்வுகளுடன் இருப்பதாகவும் அனைவருமே சிறந்த அனுபவமுள்ளவர்கள் இருப்பதால் கட்சியன் நடவடிக்கைகளில் அதிர்ப்தி கொண்ட ஒரு குழுவினர் இப்படியான தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது கருத்தில் கிழக்கு மாகாண ஆட்சியை தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் நாங்கள் எங்களுக்கிடையில் சுமுகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கு நாம் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாகவும் முதலமைச்சர் பதவி கட்சியின் முடிவு என்றும் இதில் எந்தவொரு உறுப்பினர்களினதும் அழுத்தங்களும் இல்லையென்றும் தெரிவித்த முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தின் அமைச்சுப் பதவிகள் புரிந்துணர்வுகளுடன் அனைவரதும் இணக்கப்பாடுகளுடனும் மேற் கொள்ளப்படும் இந்த விடயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தண்டாயுதபானி உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து ஆட்சி நடத்த இணங்கியுள்ளதாகவும் அவர்களுக்கும் எங்களுக்கும் எதுவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இவ்வாறான கள நிலவரத்தில் ஆட்சியை முடக்குவதற்கு ஒருசில அரசியல்வாதிகளும், அதனோடு இணைந்துள்ள மக்களும் தமது பிரச்சாரப் பணிகளுக்கு ஒருசில ஊடகங்களை பயன்படுத்தி வருவதானது கவலையை தோற்று வித்துள்ளதுடன் அமைதியாக இருக்கும் கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்களை ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளச் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று தஸாப்த காலங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட பிரதேசம் என்ற வகையில் அந்தப்பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் சவாலும் தற்போதுள்ளது. இந்த நிலையில் பதவிக்கும், அதகிhரங்களுக்கும் போட்டி போடுவது அவ்வளவு ஆக்கபூர்வமான விடயங்களாக அமையாது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முதலமைச்சராக கிழக்கில் தமிழர் ஒருவாரான சிவணேசத்துரை சந்திரகாந்தன் இருந்தார் அவரால் கிழக்கில் முஸ்லிம் மக்களை சந்தோசப்படுத்தும் எந்தவிதமான ஆக்கபூர்வமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்ற கருத்து முஸ்லிம் மக்களால் மட்டுமல்லாது தமிழ் மக்களாலும் குறை கூறப்படுகின்றது.
இந்த நிலையில் முதலாவது முதலமைச்சராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவு செய்யப்பட்டபோது முஸ்லிம்களால் எந்தவித எதிர்ப்புக்களோ ஊடகங்கள் மூலம் எதிர்ப்புக்களோ அல்லது இனவாதம் ஏற்படும் வகையில் கருத்துக்களோ தெரிவிக்கப்படவில்லை மாறாக முஸ்லிம் சமுகம் அதனை தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டதை சிந்திக்காது இன்று ஒருசில ஊடகங்கள் ஊடக தர்மத்தைவிட்டு பக்கச்சார்பாக செல்லும் நிலைமைகள் முஸ்லிம் சமுகத்தை வேதனையில் ஆழத்தியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு ஒருபக்கக் கருத்துக்களின் எதிரிரொலி எதிர் காலத்தில் மீண்டும் ஒரு இன வன்முறைக்கு கூட வழி சமைக்கலாம் என அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்களாக இருக்கின்றது. முஸ்லிம் சமுகத்தைப் பொருத்தவரையில் சந்திரகாந்தனின் முதலமைச்சர் பதவியை இனவாதமாக நோக்காத வேளையில் தற்போது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படபோது அதற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படையாக்குவது அமைதிக்கு கலங்கத்தையும் முறண்பாடுகளையும் ஏற்படுத்தும் ஒரு அங்கமாகவே கருத வேண்டியுள்ளது.
இதேவேளை கிழக்கின் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டபோது இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் இடம்பெறாத வேளையில் தற்போது நாளாந்தம் கிழக்கு முதலமைச்சர் தொடபர்க மேற்கொள்ளப்படும் இனவாதச் செயற்பாடுகள் இரு சமுகங்களின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பாதித்து மீண்டுமொரு வன்முறைக் கலாச்சாரத்திற்கு வித்திடும் செயற்பாடுகளாகவே நோக்கப்படுகின்றது.
மேற்படி விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நியாயமான முறையில் விட்டுக் கொடுப்புக்களுடன் செயற்படும் போது கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் ஆட்சி சிறப்பானதாக மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் ஒரு ஆட்சியாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
விட்டுக் கொடுப்பிற்கு மாற்றமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பேச்சுத் திறமையால் முஸ்லிம் சமுகத்தை மட்டந்தட்டும் அல்லது அவர்களின் செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்யும் தந்திரோபாயங்களை நிறுத்தாதவரை இரு சமுகங்களின் எதிர் கால அரசியல் விடயங்கள் காணல் நீராகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
இதேவேளை தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் மூவின மக்களுக்குமான அபிவிருத்திகளை நோக்கிய நகர்வாகவே தமது ஆட்சி இருக்கும் என்றும் குறிப்பாக யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
அது மட்டுமல்லாது தற்போது கிழக்கில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்புக்களுக்காக பணிப் பெண்களாக செல்லும் நிலைமைகளையும், சாதாரண தொழிலாளர்களாக செல்லும் ஆண்களையும் அத்தொழில்களுக்குச் செல்லாது நிறுத்தி கிழக்கில் சுமார் முப்பத்தையாயிரம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமது ஆட்சியில் வறுமை நிலையை இல்லாதொழிக்க பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளதுடன் 22 வீதமாக கிழக்கில் காணப்படும் வறுமை நிலையை குறைப்பதுடன் பாதிக்கப்பட மக்களின் வாழ்வாதரா விடயங்களுக்கு அமைவாக விவசாயம், மீண்பிடி, கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் போன்ற வற்றில் மேம்பாட்டை ஏற்படுத்த தமது காலத்தில் சிறந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தியை ஏற்படுத் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நல்ல செயற்றிட்டங்களை கடந்தகால முதலமைச்சர்கள் மேற்கொள்ள எத்தனிக்காத நிலையில் காலத்திற்கு ஏற்றவகையில் தற்போதைய முதலமைச்சர் பதவி மூலம் சேவை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைவராலும் விரும்பப்படுவதும் அவதானிக்கப்படுகின்றது.
கடந்த கால ஆனபவங்களை ஒரு படிப்பினையாகக் கொண்டு கிழக்கு மாகாண சபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள் போடாது ஆட்சியை நல்ல முறையில் செயற்படுத்துவதற்கு கிழக்கின் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது ஏனைய மாகாண அரசியல் வாதிகளும் திடசங்கர்ப்பங் கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் வடகிழக்கைத் தவிர ஏனையவை பெரும்பான்மை மக்களின் அதிகாரத்திற்குள் இருக்கும் நிலையில் வடகிழக்கையாவது தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புக்களுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் முன் வைக்கின்றனர்.
எனவே ஒவ்வொருவரும் மேற்படி நல்ல என்னக் கருக்களுடன் இரு இனங்களும் இனவாதக் கருத்துக்களுக்கு அப்பால் தூர நோக்குடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Post a Comment