Header Ads



அக்குரணை பிரதேசத்தின் நகர நிர்மாண, நீர் விநியோக, வடிகாலமைப்பு - ரவூப் ஹக்கீம் பணிப்புரை


அக்குரணை பிரதேசத்தின் நகர நிர்மாண, நீர் விநியோக, வடிகாலமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அக்குரணையும், அதனை சூழவுள்ள பிரதேசங்களும் வெள்ளப்பெருக்குக் காரணமாகவும், உரிய முறையில் திட்டமிடப்படாத நகர நிர்மாணம் காரணமாகவும், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்டடங்கள் காரணமாகவும் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவது குறித்து கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் ஹக்கீம் நீண்ட காலமாக கவணம் செலுத்தி வருகிறார். 

அந்தப் பின்னணியில் நகர அபிவிருத்தி, நீர்வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சராக புதிய அரசாங்கத்தில் பதவியேற்ற பின்னர், அவ்வாறான பாரிய குறைபாடுகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக அக்குரணை பிரதேச செயலகத்தில் அமைச்சர் ஹக்கீம் கடந்த திங்கட்கிழமை உயர் அதிகாரிகளை வரவழைத்து விஷேட கூட்டமொன்றை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீமின் அழைப்பின் பேரில் முஸ்லிம் விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் அவர்களும் கலந்து கொண்டார்.

அத்துடன் இந்த விஷேட கூட்டத்தில் நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஹனீபா முயீனுத்தீன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மாவில்மட, மத்திய மாகாண நீர்வழங்கள் பிரதி பணிப்பாளர் நாயகம் எல்.எல்.ஏ.பீரீஸ், அக்குரணை பிரதேச சபைத் தலைவர் சிம்சான் மற்றும் பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரிய ஆகியோர் உட்பட நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, தாழ்நில மறுசீரமைப்பு கூட்டுத்தாபனம், அனர்த்த நிவாரண திணைக்கள அதிகாரிகள் பங்கு பற்றினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் ஹக்கீம், ஹலீம் ஆகியோர் முன்னிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி எடுத்துக் கூறினர். 

நவீன தொழிநுட்பங்களை கையாண்டு தமது அமைச்சின் ஊடாக அக்குரணை நகரமும், அதனைச் சூழவுள்ள கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என கூறிய அமைச்சர் ஹக்கீம், உரிய வரைபடங்களை துரிதமாகத் தயாரிக்குமாறும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான மதிப்பீடுகளை அவசரமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளைப் பணித்தார். 

மேலும், வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்கள் நிகழும் போது மட்டும் தற்காலித் தீர்வுகளை காண்பதை விடுத்து, பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் அங்கு தெரிவித்தார். 

இந்தக் கலந்துரையாடலை தொடர்;ந்து, அக்குரணை பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர்களான ஹக்கீம், ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு ஊர் மக்களின் கருத்துக்களை செவிமடுத்ததோடு, அக்குரணை பிரதேசத்தில் முன்னெடுக்கவுள்ள செயல்திட்டங்களைப் பற்றி விளக்கமளித்தனர்.  

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

No comments

Powered by Blogger.