இலங்கையில் நடைபெற்ற ''நிதி குறைப்பு'' அதிசயம்
வடக்கு அதிவேகப் பாதை அமைப்புக்காக முன்னைய அரசாங்கத்தினால் ஐந்து நிர்மாணிப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 245 பில்லியன் ரூபாய்கள், தற்போதைய அரசாங்கத்தினால் ஒரே இரவில் 60 பில்லியன்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் குறித்த ஒப்பந்தங்களை செய்து கொண்டவர்களே இந்த 60 பில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டையும் ஏற்றுள்ளார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம், எம்ஐஜி விமானக் கொள்வனவுக்கு 12 மில்லியன் டொலர்களே தேவையென்றபோதும் 500 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை காலிமுகத்திடலின் முன்னால் அமைக்கப்படும் சங்காய் ஹோட்டல், சிஏடிசி திட்டம் என்பவற்றுக்காக காணிகள் விற்பனை செய்யப்பட்ட பணம், பாதுகாப்பு அமைச்சின் கணக்குக்கு சென்றுள்ளது.
இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் திறைசேரியின் அனுமதியின்றி செலவிடப்பட்டுள்ளன. இதனை தவிர பல பில்லியன் ரூபாய்களுக்கான கணக்குகளை காணவில்லை என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகள் இன்றி சீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எமக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது.
அரசாங்கத்தினால் அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளையே நாம் எதிர்க்கின்றோம்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக பாரியளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஆட்சி மாற்றத்துடன் சீனா தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. உள்நாட்டு ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சீன அரசாங்கத்துடன் பேணி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன துணை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பாரியளவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதே எமது பிரதான நோக்கம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அண்மையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment