Header Ads



வடகொரியா பரிசோதித்த ஏவுகணையின் பெயர் 'அதிபுத்திசாலி'

எதிரிகளின் போர்க் கப்பல்களை மிகத் துல்லியமாகக் குறி வைத்துத் தாக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாடு சனிக்கிழமை கூறியது.

இதுகுறித்து வட கொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய புதிய வகை ஏவுகணை, படகு ஒன்றிலிருந்து ஏவப்பட்டது.

இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கக்கூடிய அந்த "அதிபுத்திசாலி' ஏவுகணை, மிக பாதுகாப்பாகப் பறந்து சென்று இலக்கை அழித்தது என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், எந்த இடத்தில், எந்தத் தேதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்ற விவரத்தை அந்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

அணு ஆயுத வல்லமை கொண்ட வட கொரியா, கடும் பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தப் பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும், தங்கள் நாட்டின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது இணையவழித் தாக்குதலில் வட கொரியா ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இவற்றுக்குப் பதிலடியாகவே வட கொரியா இந்த ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.