Header Ads



இன்றைய தினம் கூடிய, தேசிய நிறைவேற்று சபையின் தீர்மானங்கள்


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இன்றைய தினம் 24-02-2015 கூடிய தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், தகவல் அறியும் சட்டமூலத்தையும் மார்ச் மாதத்தில் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிறைவேற்று சபையின் உறுப்பினரான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாவது;

கடந்த காலப்பகுதி முழுவதும் நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் காணாமற்போனமை, லலித் – குகன் போன்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பெருமளவிலான கொலைகள் மற்றும் கடத்தல்கள் எமது நாட்டில் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தேசிய குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, சம்பூரில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த காணிகளைவிட்டு அந்த மக்கள் முன்னால் ஆட்சியாளர்களால் துரத்தியடிக்கப்பட்டு அவர்களின் காணிகள் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தக் காணிகளை மீள மக்களிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவையொன்று இன்று நிறைவேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.