நரேந்திர மோடியின் கேலி சித்திரத்தை, வெளியிட்ட ஆசிரியை பணிநீக்கம் - கத்தாரில் சம்பவம்
காத்தார் தலைநகரில் உள்ள டோகாவில் பிரபலமான இந்திய பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடி பற்றிய கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளார். மோடி பற்றி கேலிச்சித்திரம் அவரை அவமதிப்பதாக உள்ளது என்று புலம்பெயர்ந்த அங்குள்ள இந்தியர்கள் கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனினும் இந்த கேலிச்சித்திரத்தை தான் வடிவமைத்து வெளியிடவில்லை என்றும் வெறுமெனே பகிர மட்டுமே செய்ததாக ஆசிரியை தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் முதலில் மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை பின்னர் பணி நீக்கம் செய்யபட்டார். இந்தியா ஜனநாயக நாடு என்றும் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அங்கு சுதந்திரம் உண்டு என்பதால் இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக ஆசிரியையின் நண்பர்கள் அங்குள்ள செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி எம்.ஈ.எஸ் இந்திய பள்ளியின் நிர்வாகத்திடம் கேட்ட போது, மோடியை பற்றிய கேலிச்சித்திரத்தில் பள்ளியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தியதால் நாங்கள் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தினோம். ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு அவர் தனது பேஸ்புக்கில் அது போன்ற படங்களை வெளியிடக்கூடாது. ஆசிரியர் என்பவர் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் என்று விளக்கம் அளித்தது.
அதேவேளையில், இந்த சம்பவம் பற்றி இந்திய தூதரகம் கூறுகையில், ஆசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் மோடி பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டது பற்றி எங்களுக்கு புகார் வந்தது. நாங்கள் பள்ளிக்கு தெரிவித்தோம். அது ஒரு தனியார் பள்ளி என்று அந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதையும் எங்களால் தெரிவிக்க முடியாது. ஆசிரியரை பணி நீக்கம் செய்யும் முடிவு பள்ளி நிர்வாகத்தின் அதிகாரத்துக்குள் வருகிறது” என்று தூதரக அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment