திருட்டு குற்றச்சாட்டு - 'ஆப்பிள்' நிறுவனத்திற்கு, 3,366 கோடி ரூபாய் அபராதம்
காப்புரிமை சட்டத்தை மீறியதற்காக, 'ஆப்பிள்' நிறுவனத்திற்கு, 3,366 கோடி ரூபாய் அபராதம் விதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தங்கள் நிறுவனத்தின் மூன்று காப்புரிமைகளை திருடியதாக, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான, 'ஆப்பிள்' மீது, அமெரிக்காவின் டெக்சாசில் இயங்கும், 'ஸ்மார்ட்பிளேஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தங்களுடைய நிறுவனத்தில், இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் குழுவில் பணிபுரிந்த பேட்ரிக் ரேஷ் என்பவர், அகஸ்டின் பெரூசியா என்பவருக்கு அளித்த தகவலை, ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. அகஸ்டின் தற்போது, ஆப்பிள் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். 'ஐடியூன்'சில் இருந்து விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்யவும், பாடல்களை பதிவு செய்து வைத்துக் கொள்வதற்கான, 'டேட்டா மேனேஜ்மென்ட்' மற்றும் 'ஸ்டோரேஜ்' தொழில்நுட்பத்தை, தங்களுடைய அனுமதியின்றி, ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது.எனவே, தங்களுக்கு 5,282 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம் கோரி இருந்தது.
கடந்த 2013ம் ஆண்டு முதல், நடந்து வரும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காப்புரிமை சட்டத்தை மீறிய, ஆப்பிள் நிறுவனத்திற்கு, 3,366 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம், துவக்கத்திலேயே வழக்கு தொடராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஆப்பிள் நிறுவனம், அபராதத் தொகை அதிகமாக இருப்பதால், செலுத்த மறுத்து அப்பீல் செய்துள்ளது.
Post a Comment